வீட்டு உரிமையாளருக்கு, வாடகைதாரர் ஒரு மாதம் முன்பணம் கொடுத்தால் போதும்' என, நீதிமன்றம் உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 8, 2015

வீட்டு உரிமையாளருக்கு, வாடகைதாரர் ஒரு மாதம் முன்பணம் கொடுத்தால் போதும்' என, நீதிமன்றம் உத்தரவு

வீட்டு உரிமையாளருக்கு, வாடகைதாரர் ஒரு மாதம் முன்பணம் கொடுத்தால் போதும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை, தம்புசெட்டி தெருவை சேர்ந்தவர், நியமத்துல்லா. அவர், சென்னையில் சிறு வழக்குகளை விசாரிக்கும், 13வது நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிஹரராஜன், என் வீட்டின் இரண்டாவது மாடியில் வாடகைக்கு குடியிருக்கிறார். வீட்டுக்கு வாடகை முன்பணம், 25 ஆயிரம் ரூபாயும், மாத வாடகை 2,500 ரூபாயும் தர வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. மின் கட்டணத்தை வாடகைதாரரே செலுத்த வேண்டும் என, ஒப்பு கொள்ளப்பட்டது. ஆனால், 2007ம் ஆண்டில் இருந்து 11 மாதங்களுக்கான வாடகை, 27,500 ரூபாய் தரவில்லை. வேண்டுமென்றே வாடகை தர மறுத்துவிட்டார்; மின் கட்டணமும் செலுத்தவில்லை. இதனால், வாடகைதாரரை வீட்டிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்திருந்தார்.எதிர் மனுதாரரான ஹரிஹரராஜன் சார்பில், அவரே நீதிமன்றத்தில் ஆஜரானார்.

வீட்டு உரிமையாளர் என்னிடம், 25 ஆயிரம் ரூபாய் முன் பணம் வாங்கினார். மாதம், 2,500 வாடகை பேசப்பட்டது. அதன்படி, நான் உரிய வாடகையை செலுத்திவிட்டேன். பாக்கி ஏதும் நான் கொடுக்க வேண்டியதில்லை. முன்பணமாக கொடுத்த 25 ஆயிரம் ரூபாய்க்கு,
உரிமையாளர், 'வவுச்சர்' ஏதும் தரவில்லை.
உரிமையாளரிடம், ஒன்பது மாதங்களுக்கு வாடகை கொடுத்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. இந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி, தற்போது வரை வாடகை செலுத்தி உள்ளேன். இரண்டு மாதங்களுக்கு மட்டுமே வாடகை பாக்கி கொடுக்க வேண்டும்.
உரிமையாளர், எனக்கு 25 ஆயிரம் ரூபாய் வாடகை முன்பணம் தர வேண்டியுள்ளது. இந்நிலையில், பாக்கி வாடகையை நான் கொடுப்பதாக சொன்ன பிறகும், என்னை வீட்டை விட்டு வெளியேற்ற முயல்கிறார்.இவ்வாறு, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சசிகுமார் பிறப்பித்த உத்தரவு:வாடகைதாரர் வீட்டு வாடகை முன்பணமாக, 25 ஆயிரம் ரூபாய் கொடுத்ததை உரிமையாளர் ஒப்புக்கொண்டார். வாடகைதாரர், இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே வாடகை பாக்கி கொடுக்க வேண்டியுள்ளது.
டில்லி, உச்ச நீதிமன்றத்தில், 1996ம் ஆண்டு நடந்த, வீட்டு வாடகை தொடர்பான வழக்கில், வீட்டு உரிமையாளருக்கு, வாடகைதாரர், 'ஒரு மாத வாடகையை முன்பணமாக கொடுத்தால் போதும்' என, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வாடகைதாரரிடம், வீட்டு உரிமையாளர் பெற்ற, 25 ஆயிரம் ரூபாய் வாடகை முன்பணத்தில், இரண்டு மாத வாடகை பாக்கி, 5,000 ரூபாய், வீட்டிற்கு ஒரு மாதத்திற்கான வாடகை முன்பணம், 2,500 ரூபாய் என, 7,500 ரூபாய் எடுத்துக் கொள்ளலாம்.
மீதம் உள்ள, 17,500 ரூபாயை வாடகைதாரருக்கு, வீட்டு உரிமையாளர் வழங்க வேண்டும். வீட்டு உரிமையாளர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment