உள்ளாட்சித் தேர்தல்களில் ஓட்டளிப்பதை கட்டாயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள குஜராத் மாநில அரசு வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் ஓட்டளிக்க தவறுபவர்கள் நூறு ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.
ஏற்கனவே, கடந்த 2009-ம் ஆண்டு திருத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல் சட்ட விதிமுறைகளை மேற்கோள் காட்டி இந்த புதிய உத்தரவை பிறப்பித்த அம்மாநில பஞ்சாயத்து, கிராமப்புற வீட்டுவசதி மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி ஜெயந்திபாய் கவாடியா, எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் சரியான காரணமில்லாமல் ஓட்டளிக்க தவறுபவர்களுக்கு நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள அனைவரும் கட்டாயமாக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்தே தீர வேண்டும். எனினும், 75 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், 75 சதவீதம் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகள், ஆறு மாதங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து வேறு பகுதிகளில் குடியேறியவர்கள், தேர்தலின்போது ஆஸ்பத்திரிகளில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டவர்கள், பணி அல்லது படிப்பு நிமித்தமாக வெளியூர்களுக்கு செல்ல நேர்ந்தவர்கள் ஆகியோருக்கு இந்த அபராதத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என அம்மாநில சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை செயலாளர் கோத்தி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதமே இதற்கான சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தபோதிலும், இது தொடர்பான அரசு உத்தரவு நேற்றுதான் பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment