திண்டிவனம் அருகே அடசல் அரசு தொடக்க பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி பள்ளி மாணவ, மாணவிகள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் இடமாற்றம்
திண்டிவனம் அருகே மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்டது அடசல் கிராமம். இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் 64 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 2 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்தனர். இந்த நிலையில்
நேற்று முன்தினம் இங்கு பணிபுரிந்த தற்காலிக ஆசிரியர் செந்தில் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனால் 64 மாணவ, மாணவிகளுக்கு ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பாடம் சொல்லி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையறிந்த மாணவ, மாணவிகள் அவர்களது பெற்றோருடன் சேர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் பள்ளி வளாகத்தில் திடீரென உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
பேச்சுவார்த்தை
இது பற்றி அறிந்த பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், சப்–இன்ஸ்பெக்டர்கள் தனசேகர், சந்திரமூர்த்தி, மரக்காணம் தாசில்தார் வெற்றிவேல், ஒன்றிய கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் சேகர், வருவாய் ஆய்வாளர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் கிருஷ்ணன், சுரேஷ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு துணை தலைவர் துரைராஜ் ஆகியோர் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மற்றொரு நிரந்தர ஆசிரியர் நியமிக்கப்படும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து ஓமிப்பேர் தொடக்க ப்பள்ளியில் இருந்து ஆசிரியர் புவனேஷ்வரி என்பவரை நியமனம் செய்தனர்.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு, மதியம் 12 மணிக்கு மாணவ–மாணவிகள் வகுப்பறைக்கு சென்றனர். பெற்றோர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment