அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பயிற்சி அளிக்க நீலகிரி மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அந்த அமைப்பினர் சென்னை தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலமாக கடந்த மாதமும், இந்த மாதமும் 4 கட்டங்களாக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி முடிவடையும் முன்னரே செப்டம்பர் 9-ஆம் முதல் ஆங்கிலப் பயிற்சியுடன் 3 கட்டங்களாக கணிதப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதனால், ஒரு ஆசிரியர், 2 ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள் தொடர்ந்து பயிற்சிக்குச் செல்வதால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முதல் பருவத் தேர்வு நடக்கவுள்ள நிலையில் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவியல், ஆங்கிலப் பயிற்சிகள், தேர்வுக் காலங்களில் நடத்தப்படும் என்றும் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இதனால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுவதுடன் ஆசிரியர்கள் முதல் பருவத் தேர்வு நடத்துவதிலும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது.
எனவே, இதை முறைப்படுத்தி மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் பயிற்சியளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment