சென்னையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 8, 2015

சென்னையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி!

ஓமந்தூரார் அரசுத் தோட்ட வளாகத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரியை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்து வைத்தார். இது தமிழகத்தின் 20-ஆவது அரசு மருத்துவக் கல்லூரியாகும்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ. 200 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய
மருத்துவக் கல்லூரி, ரூ. 107.48 கோடியில் கட்டப்பட்டுள்ள மருத்துவத் துறை சார்ந்த கட்டடங்கள் உள்ளிட்டவற்றை காணொலிக் காட்சி மூலம் அவர் திறந்து வைத்தார்.
இந்த மருத்துவக் கல்லூரியில், நிர்வாகக் கட்டடம், தொழில்முறைப் பணியாளர்கள் கூடம், மாணவர்கள் விடுதிக் கட்டடம், நூலகம், வகுப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன.
புதிய கட்டடங்கள்: மேலும், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு, சிறுநீகரவியல் பிரிவுகளுக்கு ரூ. 3.77 கோடி மதிப்பில் கட்டடம், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள நுண் உயிரியல் ஆய்வகக் கட்டடம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.
தவிர, அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 6.37 கோடியில் கட்டடம், எழும்பூர் மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவமனை செவிலியர்கள், செவிலியர் மாணவர்களுக்காக ரூ. 2.70 கோடியில் விடுதிக் கட்டடங்கள், கிண்டி கிங் நோய்த் தடுப்பு மருந்து, ஆராய்ச்சி நிலையத்தில் ரூ. 1.2 கோடி மதிப்பில் நோய் எதிர்ப்புத் திறன் கண்டறியும் ஆய்வகக் கட்டடம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.
பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தலைமைச் செயலர் பி.எஸ்.ஞானதேசிகன், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழக சுகாதார திட்ட இயக்குநர் ஷம்பு கல்லோலிகர், சுகாதாரத் துறை சிறப்புச் செயலர் பி.செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி, பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
55 ஆண்டுகளுக்குப் பிறகு...
சென்னையில் 55 ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய அரசு மருத்துவக் கல்லூரியாக ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி திங்கள்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரி 1835-ஆம் ஆண்டிலும், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி 1836-ஆம் ஆண்டிலும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி 1960-ஆம் ஆண்டிலும் தொடங்கப்பட்டன. அவற்றுக்குப் பின் சென்னையில் நான்காவது அரசு மருத்துவக் கல்லூரியாக 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் இந்தக் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது.
இங்கு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 85 எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர கலந்தாய்வு மூலம் மாணவர்கள் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்; அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு உரிய 15 எம்.பி.பி.எஸ். இடங்களில் 11 இடங்களுக்கு மாணவர்கள் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வகுப்பறைகளில் குளிர்சாதன வசதி...
சென்னை, வாலாஜா சாலையில் திறக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் புதிய அரசு மருத்துவக் கல்லூரியில் அனைத்து வகுப்பறைகளிலும் குளிர்சாதன (ஏ.சி.) வசதி செய்யப்பட்டுள்ளது. ஆய்வகங்கள், நூலகம், நிர்வாகப் பிரிவுகள், பேராசிரியர் அறைகள் உள்ளிட்ட அனைத்து அறைகளும் குளிரூட்டப்பட்டுள்ளன.
இங்குள்ள பிற சிறப்பம்சங்கள்:
* கரும்பலகை இல்லாமல் கணினி உதவியுடன் செயல்படும் நவீன வகுப்பறைகள்.
* மாணவர்களின் வருகைப் பதிவேட்டை பயோமெட்ரிக் முறையில் கண்காணிக்கத் திட்டம்.
* நவீன உபகரணங்களைக் கொண்டுள்ள ஆய்வுக்கூடங்கள்.
* பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 410 பணியிடங்கள்.
* மொத்தம் 9 துறைகள்.
* முதலாமாண்டு வகுப்புகளுக்கு உடற்கூறுயியல், உடல் செயலியல், உயிரி வேதியல் ஆகிய மூன்று துறைகள் செயல்படும்.

No comments:

Post a Comment