குஜ்ஜம்பாளையம் யூனியன் நடுநிலை பள்ளியை, உயர்நிலை பள்ளியாக மாற்ற வேண்டும் என்று, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சத்தியமங்கலம் தாலுகா குன்றியை அடுத்த குஜ்ஜம்பாளையத்தில் யூனியன் நடுநிலை பள்ளி செயல்படுகிறது. இங்கு 6ம் வகுப்பில்,18, 7ம் வகுப்பில்,28, 8ம் வகுப்பில், 26 என மொத்தம், 182 மாணவ, மாணவியர் பயில்கின்றனர்.
இதுகுறித்து, மாதேவன் தலைமையிலான கிராம மக்கள் கூறியதாவது: கோபி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட குஜ்ஜம்பாளையம் யூனியன் நடுநிலைப்பள்ளி, ஆறு ஏக்கர் பரப்பில் உள்ளது. 1 முதல், 5ம் வகுப்பு வரை, ஒவ்வொரு வகுப்பிலும் தலா, 20 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆனால் போதிய கட்டிட வசதி இல்லை. உயர்நிலை பள்ளிக்கான இடவசதி பள்ளியில் உள்ளது. இங்கு தார்சு கட்டிடமும் உள்ளது. மொத்தம், ஐந்து வகுப்பறைகள் உள்ளன. பள்ளியை சுற்றி மலைவாழ் மக்கள், 543, தாழ்த்தப்பட்டவர்கள், 10, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், 41, பிற்படுத்தப்பட்டவர்கள், 583 குடும்பங்கள் என, பல தரப்பினர் வசிக்கின்றனர். பள்ளியில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதியும் போதுமானதாக உள்ளது. தரம் உயர்த்தப்பட்டு, உயர்நிலை பள்ளியாக உருவானால், குன்றி பஞ்., முழுவதும் உள்ள, 727 மாணவர்கள் கல்வி பயில முடியும். இப்பள்ளியில் அறிவியல் ஆய்வகம் இல்லை. உயர்நிலை வகுப்புக்கு தேவையான அறிவியல் உபகரணங்கள் உள்ளன. பள்ளி நூலகத்தில், 275 புத்தகங்கள் உள்ளன. தற்போது, 13 பெஞ்ச், 13 டெஸ்க் மட்டுமே உள்ளது. தீ தடுப்பு சாதனங்கள், பள்ளியில் இல்லை. இங்கிருந்து கடம்பூர் மேல்நிலை பள்ளிக்கு, அடர்ந்த வனங்கள் இடையே, 25 கி.மீ., தூரத்தை கடந்து செல்ல வேண்டும். இங்கு புலி, வன விலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இங்குள்ள மலைவாழ் பழங்குடியின மக்கள், கல்வியில் மிகவும் பின் தங்கி உள்ளனர். மேல் நிலை கல்வி பயில, பள்ளிகள் இல்லாததால், 8ம் வகுப்புடன் கல்வியை கைவிட்டு, கூலி வேலைக்கு செல்வது காலம், காலமாக நடக்கிறது. பெண் குழந்தைகளுக்கு உயர் கல்வி கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் பெற்றோர்களும், குழந்தை திருமணத்தை ஊக்குவிக்கின்றனர். உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று, பஞ்., தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு நான்கு முறை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி சார்பிலும், மூன்று ஆண்டாக பள்ளி சம்பந்தப்பட்ட கருத்துருக்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
ஜூன், 2014ம் ஆண்டு நடந்த சட்டசபை கூட்டத்தில், "50 நடுநிலை பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். மலை பகுதிக்கும், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்' என்று, முதல்வர் அறிவித்து இருந்தார். ஆனால், எங்கள் பள்ளி தரம் உயர்த்தப்படவில்லை. எனவே, இனியேனும் பள்ளியை தரம் உயர்த்தி, அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று, கலெக்டரிடம் மனு கொடுத்தோம். அவரும், அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி இருப்பதாக தெரிவித்தார். இம்முறையும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளி பட்டியலில், எங்கள் பள்ளி வராதது வருத்தமளிப்பதாக உள்ளது. கிராமப்புற பழங்குடியின மக்களின் கல்வி நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே, அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment