கல்வி கடனுக்கான வட்டி தள்ளுபடி அறிவிப்பு வெளியாகி, ஒன்பது நாட்களாகியும், அதற்கான சுற்றறிக்கை, வங்கி கிளைகளை எட்டவில்லை.
அனைத்து வங்கி கிளைகளும், கணினி மூலம் இணைக்கப்பட்டு உள்ள
நிலையில், சாதாரண ஒரு சுற்றறிக்கை, வங்கி கிளைகளை, எட்டாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது என, கல்வி கடன் ஆலோசனை குழு வருத்தம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, குழுவின் அமைப்பாளர், பிரைம் பாயின்ட் சீனிவாசன், மனித வள மேம்பாட்டுத் துறை செயலர், இந்திய வங்கிகள் சங்க துணை தலைமை நிர்வாகி ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதம்:
வங்கிகளில், 2009 ஏப்ரல், 1 முதல் 2014 மார்ச், 31ம் தேதி வரை, கல்வி கடன் பெற்றவர்களுக்கு, வட்டித் தள்ளுபடி செய்ய வேண்டும். வரும், 15ம் தேதிக்குள் இதற்கான விவரங்களை, முதன்மை வங்கியான கனரா வங்கியின், இணையத்தில், அனைத்து வங்கிகளும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, இந்திய வங்கிகள் சங்கம், ஆகஸ்ட், 26ம் தேதி உத்தரவிட்டது.
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தலின்படி வெளியிட்ட இந்த உத்தரவு, வங்கி கிளைகளை இதுநாள் வரை சென்றடையவில்லை. கல்வி கடன் வட்டித் தள்ளுபடி பெற, இதுவே கடைசி வாய்ப்பு என, அறிவிக்கப்பட்ட நிலையில், பெற்றோர்களும், மாணவர்களும், வங்கி கிளைகளை அணுகினால், இதுபோன்ற சுற்றறிக்கை தங்களுக்கு வரவில்லை என, வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால், பெரும் மன உளைச்சலுக்கும், அலைச்சலுக்கும், பெற்றோர்களும், மாணவர்களும் ஆளாகி உள்ளனர். டிஜிட்டல் இந்தியா உருவாகி வருகிறது. அனைத்து வங்கி கிளைகளும், கணினியில் இணைக்கப்பட்டு உள்ளன என, மத்திய அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது.
இதுபோன்ற சூழலில், வங்கிகளுக்காக வெளியிடப்பட்டு, ஒன்பது நாளாகியும், சாதாரண ஒரு சுற்றறிக்கை, வங்கி கிளைகளை எட்டாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
மேலும், வட்டித் தள்ளுபடியை பதிவேற்றம் செய்ய, செப்., 1ம் தேதி துவங்கப்பட வேண்டிய, ஆன்லைன் வசதியையும், இதுவரை துவங்கவில்லை. இதற்கு, தொழில்நுட்ப கோளாறு காரணம் என, வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர்.
மக்கள் நலனுக்காக, அரசு கொண்டு வந்துள்ள ஒரு திட்டம், முழுமையான பலனை அளிக்குமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. எனவே, சந்தேகங்களை போக்கவும், உரிய பலன் மக்களை சென்றடையவும், கல்வி கடன் வட்டித் தள்ளுபடி சுற்றறிக்கையை, அனைத்து வங்கிகளுக்கும், உடனடியாக அனுப்புவதோடு, இதுகுறித்து பொது அறிவிப்பையும், இந்திய வங்கிகள் சங்கம் வெளியிட வேண்டும்
No comments:
Post a Comment