மத்திய அரசின் பொருளாதாரத் துறையின் இந்தியப் பொருளாதாரப் பணிக்கான (இந்தியன் எகனாமிக் சர்வீஸ் - ஐ.இ.எஸ்) தேர்வில் கூலித்தொழிலாளியின் மகள் சாதனை படைத்துள்ளார்.
மத்திய அரசின் பொருளாதாரத் துறையின் இந்தியப் பொருளாதாரப் பணிக்கான (இந்தியன் எகனாமிக் சர்வீஸ் - ஐ.இ.எஸ்) தேர்வுகளை மத்தியத் தேர்வாணையம் ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிகாரிகளாக நியமனம் செய்யப்படுகிறார்கள்.
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள மகாநங்கலா கிராமத்தைச் சேர்ந்தவர் அமுல்யா குமார் பெகேரா (50). இவர் பாரதீப்பில் உள்ள ஒரு உரத்தொழிற்சாலையில் தினக்கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவரது மகள் அபராஜிதா பிரியதர்ஷினி பெகரா (24). பொருளாதார சிக்கலையும் பொருட்படுத்தாமல் அவரை தொடர்ந்து படிக்குமாறு தந்தை அமுல்யா குமார் ஊக்கம் அளித்துள்ளார்.
அப்பா தந்த ஊக்கத்தில் உத்கல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரவியல் முதுகலைப் பட்டம் பெற்ற அபராஜிதா, பின்னர் தீவிர முயற்சி மேற்கொண்டு இந்திய பொருளாதார சேவைக்கான (ஐ.இ.எஸ்.) எழுத்துத்தேர்வு எழுதினார்.
சமீபத்தில் இதன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், அபராஜிதா அகில இந்திய அளவில் 13-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்த வெற்றி குறித்து அபராஜிதா கூறுகையில், நான் படிப்பதற்கு ஊக்கமும், வழிகாட்டியாகவும் இருந்தவர் எனது தந்தைதான். என் படிப்பிற்கு செலவு செய்வதற்காக அவர் வியர்வை சிந்தி உழைத்தார். வறுமையை நினைத்து ஒருபோதும் அவர் வேதனை அடையவில்லை. அவர் சிந்திய வியர்வையால்தான் நான் இன்று சாதனை படைத்துள்ளேன். எனக்கு கிடைக்கப்போகும் அகில இந்திய பணியை அவருக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார்.
No comments:
Post a Comment