இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் இன்று தீர்ப்பளித்தார்.
மோட்டார் வாகன விபத்தில் கூடுதல் இழப்பீடு கோரும் வழக்கில், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அதுகுறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சமூக ஆர்வலர் நிம்முவசந்த் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான முதல் அமர்வு தள்ளுபடி செய்தது. அதன்பிறகு ஹெல்மெட் அணிவதில் இருந்து பெண்கள், குழந்தைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று 2007-ல் அரசு பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தன்னையும் வாதியாகச் சேர்க்கக் கோரி நிம்முவசந்த் மீண்டும் மனுதாக்கல் செய்தார்.
ஹெல்மெட் அணியாததால் ஒரு சதவீதம் பேர் மட்டுமே உயிரிழப்பதால் கட்டாய ஹெல்மெட் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் இன்று பிறப்பித்த உத்தரவு:-
2005-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஹெல்மெட் அணியாததால் 41,330 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் ஹெல்மெட் அணியாததால் தினமும் 17 பேர் இறக்கின்றனர். ஹெல்மெட் கட்டாயம் என்று உத்தரவிட்ட பிறகு சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்திருப்பதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் மனுதாரரின் மனுவை உயர்நீதிமன்ற முதல் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. அதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல், மனுதாரர் மீண்டும் உயர் நீதிமன்றத்தின் கதவைத் தட்டியுள்ளார். இது, சட்ட நடவடிக்கையை தவறாகப் பயன்படுத்துவது போலாகும். தமிழக அரசையும், நீதித்துறையையும் மனுதாரர் கண்டனம் செய்திருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும். மனுதாரரை இப்படியே விட்டுவிட்டால், மற்றவர்களும் அதே நடைமுறையை பின்பற்ற ஊக்குவிப்பது போல் ஆகிவிடும்.
மனுதாரரின் இந்த வழக்கு இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எதிரானது. 155 நாடுகளில் ஹெல்மெட் அணியும் நடைமுறை உள்ளது. மனித உயிர்களின் மதிப்பைக் கருத்தில் கொண்டுதான் கட்டாய ஹெல்மெட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைப் புரிந்து கொள்ளாமல் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ள மனுதாரருக்கு வழக்கு செலவுத் தொகை கணிசமாக விதிக்கப்பட வேண்டும். மனுதாரர் மூத்த குடிமகன் என்பதாலும், சமூக ஆர்வலர் என்று கூறுவதாலும் வழக்கு செலவுத் தொகை விதிக்கவில்லை. மனுதாரர் தெரிவித்த கருத்துகள் பொதுமக்களுக்கு எதிரானது என்பதால் அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment