3ம் பருவ பாடப்புத்தகம் வழங்கினாலும் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு தடை-DINAKARAN - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 4, 2016

3ம் பருவ பாடப்புத்தகம் வழங்கினாலும் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு தடை-DINAKARAN

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் மூன்றாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் மாணவ, மாணவியர்களுக்கு நேற்றுமுன்தினம் வழங்கப்பட்டது. ஆனால், அதை வைத்து உடனடியாக மாணவர்களுக்கு பாடம் நடத்தக்கூடாது என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவக்கல்வி முறை அமலில் உள்ளது. கனமழை காரணமாக இரண்டாம் பருவத்தேர்வு, ஜனவரி 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இரண்டாம் பருவத்தேர்வு விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டது. இரண்டாம் பருவத்தேர்வுகளே இன்னும் நடக்காத நிலையில், மூன்றாம் பருவ பாடப்புத்தகத்தில் பாடம் நடத்தினால் மாணவர்களிடையே குழப்பம் ஏற்படும் என்பதால், புதிய புத்தகத்தில் பாடம் நடத்தக்கூடாது என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ‘இரண்டாம் பருவத்தேர்வு முடிந்த பின்தான் மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வழங்கப்படும். தற்போது ஒரு மாதம் வரை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. பிப்ரவரியில் புத்தகம் கொடுத்தால் அரசுக்கு கெட்ட பெயர் உண்டாகிவிடும் என புத்தகங்களை இப்போதே வழங்கியுள்ளனர். இரண்டாம் பருவத்தேர்வு நடத்தப்படும் முன் மூன்றாம் பருவ பாடப்புத்தகத்தில் பாடம் நடத்த தொடங்கினால் மாணவர்கள் குழப்பம் அடைவர் என்பதால், தேர்வு முடியும் வரை புதிய புத்தகத்தில் பாடம் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.இதனால், புத்தகங்களை மாணவர்களிடம் வழங்கிவிட்டு பத்திரமாய் வீட்டில் வைக்க அறிவுறுத்தியுள்ளோம். சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் புத்தகங்களை பெயரளவில் கொடுத்துவிட்டு, மீண்டும் பெற்று பள்ளி அலமாரியில் வைத்துள்ளனர். ஏனெனில், ஆர்வ மிகுதியில் புதிய பாடத்தில் மாணவர்கள் கவனம் சென்றுவிட்டால் இரண்டாம் பருவத்தேர்வில் பின்னடைவு ஏற்படும்’ என்றனர்.

No comments:

Post a Comment