ஆதார் அடையாள எண் மூலம் ஊழல் தடுக்கப்பட்டு இந்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,700 கோடி மிச்சமாகும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் உள்ள உலக வங்கியின் தலைமை அலுவலகத்தில் ‘உலக வளர்ச்சி அறிக்கை 2016: டிஜிட்டல் டிவிடெண்ட்ஸ்’ என்ற அறிக்கை வெளியிடப்பட்டது. அப்போது அவ்வங்கியின் தலைமை பொருளாதார வல்லுநர் கவுஷிக் பாசு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய அரசின் ஆதார் அடையாள எண் சுமார் 100 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏழை மக்கள் தங்களுக்கான நலத்திட்டங்களை எளிதாக பெற முடிகிறது. அதேபோல, நலத்திட்டங்களை உரியவர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் இந்த ஆதார் எண் அரசுக்கு உறுதுணையாக உள்ளது.
இதன்மூலம் முறைகேடுகள், ஊழல் தடுக்கப்பட்டு இந்திய அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.6,700 கோடி மிச்சமாகிறது. இந்த நிதியை வேறு பயனுள்ள திட்டங்களுக்கு பயன்படுத்த முடிகிறது. மேலும் நிதி பற்றாக்குறை கணிசமாக குறையவும் இது வழிவகுத்துள்ளது.
மொத்தம் உள்ள 125 கோடி மக்கள் தொகையில், மீதம் உள்ளவர்களுக்கும் ஆதார் எண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு இந்த முறை உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment