பாட்கோ நடத்தும் ஐ.ஏ.எஸ்., பயிற்சி வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு நேற்று நடந்தது; 176 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
புதுச்சேரி ஆதிதிராவிடர் மேம்பாட்டுக் கழகம்(பாட்கோ), சென்னை மனிதநேய அறக்கட்டளையுடன் இணைந்து, இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பு முடித்த ஆதிதிராவிட இளைஞர்களுக்கு, ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்., பயிற்சி அளித்து வருகிறது. நடப்பு 2015--16ம் ஆண்டில், ஐ.ஏ.எஸ்., முதல்நிலை தேர்வு எழுதவுள்ள மாணவர்களை, தகுதி அடிப்படையில் தேர்தெடுத்து, 6 மாதம் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பயிற்சி வகுப்பில் சேருவதற்காக 167 ஆண்கள், 66 பெண்கள் என, மொத்தம் 233 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான நுழைவுத் தேர்வு நேற்று நடந்தது.
நெல்லித்தோப்பில் உள்ள மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நுழைவுத் தேர்வில் 129 ஆண்கள், 47 பெண்கள் உட்பட 176 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெறுகின்ற முதல் 10 மாணவர்கள், சென்னையில் உள்ள மனிதநேயம் அறக்கட்டளை பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்படும். சைதை துரைசாமி மனிதநேய ஐ.ஏ.எஸ்., அகாடமியின் சிறப்பு வல்லுநர்கள் பயிற்சி அளிப்பர்.
மணிமேகலை பள்ளியில் நடந்த நுழைவுத் தேர்வை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜவேலு, பாட்கோ மேலாண் இயக்குநர் ரவீந்திரன், பொதுமேலாளர் ஆறுமுகம், மேலாளர் ராஜேந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். நுழைவுத் தேர்வுக்கான ஏற்பாடுகளை, மேலாளர் கிருஷ்ணராஜ், உதவி மேலாளர் வைதேகி மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment