திருச்சி மார்சிங்பேட்டை அந்தோணியார் ஆலயத்தையொட்டிய தெருவில் அமைந்துள்ளது பீமநகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி.
பல்வேறு அறிஞர்கள், சான்றோர்களின் பொன்மொழிகள் அச்சிடப்பட்ட வண்ண போஸ்டர்களுடன் கருத்தைக் கவர்கின்றன இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அறை மற்றும் வகுப்பறைகளின் வெளிப்புறச் சுவர்கள். வராண்டா, வகுப்பறைகள், கழிப்பறை உட்பட அனைத்து இடங்களும் டைல்ஸ் பதிக்கப்பட்டு, தூய்மையாக பளிச்சென்று கண்ணைக் கவர்வதாக உள்ளது.
பள்ளியில் படிக்கும் அனைவருமே ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால், அனைவருக்கும் தூய்மை, சுகாதாரம் குறித்து நன்றாகத் தெரிந்திருக்கிறது. அனைத்து குழந்தைகளும் தலைக்கு எண்ணெய் தடவி, தலைவாரி, தூய்மையான சீருடை அணிந்து உற்சாகமாக இருந்தனர். இவற்றுக்கெல்லாம் காரணம் பள்ளி ஆசிரியர்கள்தான்.
கடமையை மட்டும் செய்யும் ஆசிரியர்களுக்கு மத்தியில், “கற்பித்தல் மட்டும் கடமையல்ல; அதையும் தாண்டி பள்ளிக் குழந்தைகளுக்காக செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது” என்கிறார் பள்ளித் தலைமை ஆசிரியர் து.ராஜராஜேஸ்வரி.
அவர் மேலும் கூறியது: பள்ளியில் தற்போது மொத்தம் 56 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இவர்களில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான ஆங்கில வழிக் கல்வி பயிலும் 13 பேரும் அடக்கம்.
இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள குழந்தைகள் வேறு பள்ளிக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் பள்ளியை அனைத்து நிலையிலும் மேம்படுத்த முடிவு செய்தோம்.
முதலாவதாக, குழந்தைகளுடன் அவர்களின் உறவினர்களைப் போல ஆசிரியர்கள் பழகுவதால் அச்ச உணர்வின்றி உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். குழந்தைகளிடம் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களைக் கண்டு அவர்களின் பெற்றோரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால், கடந்த ஆண்டைவிட மாணவர் எண்ணிக்கை சிறிது அதிகரித்துள்ளது.
ஸ்மார்ட் கிளாஸ்…
பள்ளியில் குழந்தைகள் விளையாட இடமில்லாததால் அவர்களுக்காக வேறு பயனுள்ள வசதியை ஏற்படுத்தத் திட்டமிட்டோம். அதன்படி, ஒழுக்கம், சுகாதாரத்தை அடுத்து குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கத் திட்டமிட்டோம். இதில், பாடங்கள் மட்டுமின்றி, சமூகம், சுற்றுச்சூழல், விஞ்ஞானம் என பல்வேறு விஷயங்கள் குறித்தும் கற்பிக்க உள்ளோம்.
மாணவ- மாணவிகள் படித்து அறிவை மேம்படுத்திக்கொள்ள பள்ளியில் பல்வேறு தலைப்புகளில் 701 நூல்கள் உள்ளன.
பாடத்தின் கருப்பொருளை எளிதாக விளக்கும் ‘இ-கன்டென்ட்’ என்ற வசதியை பள்ளி ஆசிரியர்கள் சகுந்தலா, சுப்புலட்சுமி, நர்கீஸ், பாலின் வளர்மதி ஆகியோருடன் இணைந்து நாங்களே உருவாக்கியுள்ளோம். எங்களது செயல்பாடுகளுக்கு மாவட்டக் கல்வித் துறை முழு ஒத்துழைப்பு அளிப்பதாலேயே இவையெல்லாம் சாத்தியமாகிறது என்றார் ராஜராஜேஸ்வரி.
புரொஜெக்டர், கணினி, மடிக்கணினிகளை அரசு தந்துள்ள நிலையில், உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசை எதிர்பார்க்காமல் சொந்தப் பணம் ரூ.1.25 லட்சத்தை செலவழித்துள்ளார் ராஜராஜேஸ்வரி.
ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும், வளர்ச்சிக்காகவும் சமூக அக்கறையுடன் செயல்படும் ஆசிரியர்களைக் கொண்ட இப்பள்ளி, பிற பள்ளிகளுக்கு முன்மாதிரி என்றால் மிகையல்ல.
No comments:
Post a Comment