மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்களில் ௨௫ சதவீதம் பேர் தாமதமாக பணிக்கு
வருவதால் நோயாளிகள் உரிய சிகிச்சை கிடைக்காமல் அவதியுறுகின்றனர்.
இங்கு, மருத்துவமனை பணி ஒதுக்கீட்டில் ௭௩ டாக்டர்களும்,
மருத்துவக் கல்லுாரி பணி ஒதுக்கீட்டில் ௪௦௦க்கு மேற்பட்டோரும் பணியாற்றுகின்றனர். இவர்களில் தாமதமாக பணிக்கு வருவோர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதனால், டாக்டர்கள் வெளி நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல், அடுத்தடுத்த நாட்களில் வருமாறு அலைய விடுகின்றனர்.
புதிய முறைக்கு எதிர்ப்பு
டாக்டர் ஒருவர் கூறியதாவது: டாக்டர்கள் சிலர் தாமதமாக வருவதால், அனைவருக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. பலர், 'உயரிய பதவியில் இருக்கும் தங்களின் வருகையை, அரசு எப்படி
கண்காணிக்கலாம்' என்ற 'ஈகோ' காரணமாக 'பயோ - மெட்ரிக்' வருகைப் பதிவு முறையை எதிர்க்கின்றனர்.
இருப்பினும், அறுவை
சிகிச்சையின் போது டாக்டர்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது. வெளியிடங்களுக்கு மருத்துவ முகாம்களுக்கு செல்லும் போதும், 'ஷிப்ட்' மாறும் போதும் பயோ - மெட்ரிக் முறையில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, என்றார்.
கடந்த ௨௦௧௨ல் அரசு மருத்துவமனைகளில் கொண்டுவரப்பட்ட பயோ - மெட்ரிக் வருகைப் பதிவீட்டு முறைக்கு டாக்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனால், அம்முறை
கைவிடப்பட்டது.
பயோ - மெட்ரிக்
உண்மை என்ன
பெங்களூருவை சேர்ந்த பயோ - மெட்ரிக் இயந்திரங்களின் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியதாவது:
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ௨,௫௦௦ ரூபாய்க்கும் குறைவான விலையில் பயோ - மெட்ரிக் இயந்திரங்களை விற்கிறோம். இதில் செய்யப்படும் ஒரு சிறிய 'புரோகிராம்' மூலம், வெவ்வேறு 'ஷிப்ட்'களில் வேலை செய்பவர்களும் குழப்பமின்றி தங்களின் வருகையை பதிவு செய்யலாம்.
இத்தகைய 'புரோகிராம்'
களுடன் தான் இயந்திரங்கள் விற்பனைக்கு வருகின்றன. எனவே, இயந்திரம் குறித்த அரசு டாக்டர்களின் புகார் வேடிக்கையாக உள்ளது, என்றார்.
சொந்த 'கிளினிக்கே' முக்கியம்
உள்நோயாளிகளை பரிசோதித்து அவர்களுக்கு உரிய சிகிச்சையை பரிந்துரை செய்ய ஒவ்வொரு பிரிவிலும் பணி ஒதுக்கீடு பட்டியல் தயார் செய்யப்படுகிறது.
இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள டாக்டர்களில் சிலரை தவிர மற்றவர்கள் வார்டு பக்கம் செல்வதே இல்லை. வெளிநோயாளிகளுக்கு மட்டும் சிறிது நேரம் சிகிச்சை அளித்து விட்டு, அவர்களின் சொந்த 'கிளினிக்' அல்லது அவர்கள் பணிபுரியும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று விடுகின்றனர். அவர்களை துறை தலைவர்களும் கண்டுகொள்வதில்லை.
No comments:
Post a Comment