746 பள்ளிகளை மூடக் கோரிய வழக்கில் கல்வித்துறை செயலாளரை நேரில் ஆஜர் ஆக உயர்நீதிமன்றம் உத்தரவு ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 20, 2016

746 பள்ளிகளை மூடக் கோரிய வழக்கில் கல்வித்துறை செயலாளரை நேரில் ஆஜர் ஆக உயர்நீதிமன்றம் உத்தரவு !

அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 746 பள்ளிகளை மூடக் கோரிய வழக்கில், பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக "மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குநர் ஏ.நாராயணன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் உள்ள 746 பள்ளிகள் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விதிமுறைகளைக் கூட கடைபிடிக்காத நிலையில், 2004-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தாற்காலிக அங்கீகாரத்தை பள்ளிக் கல்வித்துறை வழங்கி வருகிறது.இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மே 31-ஆம் தேதி வரை ஒரே ஒரு முறை என்ற அடிப்படையில் தாற்காலிக அங்கீகாரம்வழங்கப்பட்டுள்ளது என்றும், இனி நிலம் உள்ளிட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்யாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீட்டிக்கப்படாது என்றும் தமிழக அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.இந்த நிலையில், தகுதிகளை பூர்த்தி செய்யாமல் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தாற்காலிக அங்கீகாரத்தை நீட்டிக்காமல் மூடுவதற்கு உத்தரவிட வேண்டும். இந்தப் பள்ளிகள் குறித்து மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், மீண்டும் அதே அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக்கல்வித் துறை இணைச் செயலர் கே.ரவிசந்திரன் தாக்கல் செய்த பதில் மனுவில், "சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றதால், இந்த விவகாரத்தில் நிபுணர் குழு அளித்த பரிந்துரைகள் மீது இறுதி முடிவு எடுக்க முடியவில்லை. இறுதி முடிவு எடுக்க மேலும் 2 மாதம் கால அவகாசம் வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.

பின்னர்இரு தரப்பு வாதங்களை அடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:-வழக்கில் இதுவரை ஒரு முடிவு எட்டப்படாமல் தொடர்கிறது.அரசு சார்பில் கோரியதால், அக்டோபர் 31-ஆம் தேதி வரை இறுதி கால அவகாசம் அளிக்கப்படுகிறது.அடுத்த விசாரணையின்போது, எடுக்கப்பட்ட நடவடிக்கையை உரிய ஆவணங்களுடன் பள்ளிக்கல்வித் துறையின் முதன்மை செயலாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றனர்.இதையடுத்து, வழக்கின் விசாரணையை நவம்பர் 7-க்கு ஒத்தி வைத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment