மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்கும் வகையில், "நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட
வேண்டும் என நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக அனைத்து தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையானது, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் "நீட்' பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடத்தப்பட வேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் மருத்துவப் படிப்பு சேர்க்கையானது, "நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அந்தந்த மாநில அரசுகள் சார்பில் நடத்தப்படும் பொதுக் கலந்தாய்வு மூலமே நடத்தப்பட வேண்டும்.
அவ்வாறு மாநில அரசின் பொதுக் கலந்தாய்வின் கீழ் வராத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், வெளிப்படையான முறையில் "நீட்' நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க எந்தவொரு மாணவருக்கும் பல்கலைக்கழகங்கள் தடைவிதிக்கக் கூடாது. சேர்க்கை முடிந்ததும், அதுதொடர்பான முழு விவரங்களை யுஜிசியிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பல்கலைக்கழகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment