பள்ளி மாணவர்களுக்குத் தூய தமிழ் அகராதிகள் வழங்கப்படும் சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, September 1, 2016

பள்ளி மாணவர்களுக்குத் தூய தமிழ் அகராதிகள் வழங்கப்படும் சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு!

பள்ளி மாணவர்களுக்குத் தூய தமிழ் அகராதிகள் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அறிவித்தார்.

சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு புதன்கிழமை பதிலளித்து அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்புகள்:

மாணவர்களின் மனதில் நல்ல தமிழ்ச் சொற்களைப் பதிய வைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காக வழக்கிழந்து வரும் தூய தமிழ்ச் சொற்களைப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவதற்கு உதவிட நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, பட விளக்கத்துடன் கூடிய அகராதியைத் தொகுத்து வகுப்பு வாரியாக கல்வித துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

கலைக் கழகம்: தமிழ்மொழியை காக்கும் நோக்கில் அன்றாடம் பயன்பாட்டுக்கு வரும் பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைத் தரப்படுத்தி ஊடகங்களுக்கும், அறிவியாளர்களுக்கும், மொழியியலாளர்களுக்கும் வழங்கும் நோக்கில் அகர முதலி இயக்ககத்தில் தமிழ் கலைக் கழகம் ஏற்படுத்தப்படும்.

தமிழ்ச் சொற்களைப் பகுத்தறிந்து அறிவியல் நோக்கில் ஆய்வு செய்து, புதிய கலைச் சொற்களை உருவாக்க விரும்புவோருக்கு உதவிடவும், தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளின் தமிழ்ப் பாடத் தேர்வர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் வகையிலும் தமிழ்ச் சொற்களின் சரியான வேர்ச் சொற்களைத் தொகுதித்து வேர்ச் சொல் சுவடி எனும் நூல் அச்சிட்டு வெளியிடப்படும்.

தமிழாய்வு அரங்கம்: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் மாதந்தோறும் அயல்நாட்டறிஞர் அழைக்கப்பட்டு தமிழாய்வு அரங்கம் நடத்தப் பெறும். இந்த அரங்கம் நடத்தப்படுவதால் தமிழுக்கு புதிய ஆய்வு நூல் கிடைப்பதோடு தமிழாய்வு மேலும் செம்மையுறும்.

தமிழியல் ஆராய்ச்சியாளர்கள் பயன்பெறும் வகையில், தமிழ் இலக்கியம் தடம் பதித்த 116 ஆண்டுகள் என்ற தலைப்பின் கீழ், 1900 முதல் 2016 வரை வெளிவந்த இலக்கிய நூல்களின் விவர அட்டவணை தமிழ், ஆங்கில மொழிகளில் வெளியிடப்படும்.

கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வு நூலகம் சீராக்கி பராமரிக்கப்படும். மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் புதிதாக மூன்றாம் பரிசு வழங்கப்படும். இந்தப் பரிசு ரூ.5 ஆயிரம் கொண்டதாக இருக்கும்.

மென்தமிழ்ச் சொல்லாளர் மென்பொருள்: கணினியில் ஆங்கில மொழிக்கென சொல் திருத்தம் செய்யும் வசதி இருக்கிறது. இதே போன்று தமிழில் ஒற்றுப்பிழை, சந்தி, மயங்கொலி உள்ளிட்ட இலக்கணப் பிழைகள் ஏதுமின்றி எழுதத்தக்க வகையிலும், தவறுகளைத் தானே சுட்டிக் காட்டித் திருத்திக் கொள்ளும் வகையிலும் ரூ.300 மதிப்பில் "அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர்' மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் முதல் கட்டமாக 10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்குப் பெற்று வழங்கப்படும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்தார்.

குவாஹாட்டி பல்கலை.யில் தமிழ் பயில உதவித்தொகை

அசாம் மாநிலம் குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் தமிழை விருப்பப் பாடமாக பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்புகள்:

அசாம் மாநிலத்தில் உள்ள குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் தமிழை விருப்பப் பாடமாகப் பயிலும் 6 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.1.39 லட்சம் வழங்கப்படும். மேலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை அளிக்கப்படும்.

21-ஆம் நூற்றாண்டில் அயலகத் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் 5 அயலக நாடுகள் ஒவ்வொன்றில் இருந்தும் தகுதி வாய்ந்த 5 தமிழ்ப் படைப்பாளர்களிடம் இருந்து கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை போன்ற தரமான படைப்புகளைப் பெற்று மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நூல்களாக வெளியிடப்படும்.

மோரீஷஸில் தமிழ்: தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ஒன்றான மோரீஷஸ் நாட்டில் தமிழர்களுக்குத் தமிழ் மொழியை எழுதவும், பேசவும் பயிற்சி அளிக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று ராமச்சந்திரன் அறிவித்தார்.

No comments:

Post a Comment