இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை பெரிதும் தணிந்திருக்கிறது. தினசரி பாதிப்புகள், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகின்றன.
இதனைக் கருத்தில் கொண்டு பள்ளிகளை திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முதலில் 9-12ஆம் வகுப்பு வரையும், அதன்பின்னர் 6-8ஆம் வகுப்பு வரையும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு திரும்பி நேரடி வகுப்புகளில் பங்கேற்று பாடம் பயிலத் தொடங்கியுள்ளனர்.
அடுத்தடுத்து பள்ளிகள் திறப்பு
அடுத்தகட்டமாக தொடக்கப் பள்ளி மாணவர்களை வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் 20ஆம் தேதி முதல் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று மத்தியப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. வேலை நாட்களில் தினசரி 50 சதவீத பேர் வீதம் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விடுதி வசதிகள் இருக்கும் பள்ளிகள் 8, 10, 12 ஆகிய வகுப்புகளில் 100 சதவீத மாணவர்களுடன் செயல்படலாம்.
பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு
அதேசமயம் பள்ளிக்கு செல்ல பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் ஒப்புதல் கடிதம் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க தொடக்கப் பள்ளி மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆன்லைன் வகுப்புகளையே தொடருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
முதலில் தடுப்பூசி வரட்டும்
இதுதொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பேசிய இந்தூர் பெற்றோர் சங்கத்தின் துணை நிறுவனர் ஜிதேந்திரா பர்வானி, குழந்தைகள் மத்தியில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் போன்றவை பரவி வருகின்றன. இந்த சூழலில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு என்பது தவறான முடிவு. தனியார் பள்ளி உரிமையாளர்களை மகிழ்ச்சியூட்டும் வகையில் அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க எங்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
மூன்றாம் அலை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் மாநில அரசு மிகவும் கவனம் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பெற்றோர்கள் சிலர் கூறுகையில், குழந்தைகளுக்கு தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனை போட்டுக் கொண்ட பின்னரே பள்ளிக்கு அனுப்பி வைக்க விரும்புகிறோம். அதற்கு முன்னதாக பள்ளிக்கு செல்வது மிகவும் ஆபத்தானதாக பார்க்கிறோம் என்றனர்.
No comments:
Post a Comment