இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் நெடுஞ்சாலை பற்றிய தகவல்களை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் நெடுஞ்சாலை (Electric Highway), டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் நகரங்களுக்கு இடையே விரைவில் அமையவுள்ளது. ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரான நிதின் கட்காரி தற்போது இந்த மகிழ்ச்சியான செய்தியை பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.
டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இரண்டு நகரங்களுக்கு இடையே எலெக்ட்ரிக் நெடுஞ்சாலையை அமைப்பது தொடர்பாக வெளிநாட்டு நிறுவனத்துடன் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சக அதிகாரிகள் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் நகரங்களுக்கு இடையே மட்டுமல்லாது, டெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு இடையேயும் எலெக்ட்ரிக் நெடுஞ்சாலையை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்வீடனை சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டுள்ளனர்.
இந்தியாவின் நெடுஞ்சாலைகள் துறையில் வெளிநாட்டு முதலீட்டை அமைச்சர் நிதின் கட்காரி வலியுறுத்தி வருகிறார்.
முன்னதாக இந்தியாவில் எலெக்ட்ரிக் நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு ஐரோப்பிய யூனியனையும் கூட அமைச்சர் நிதின் கட்காரி அழைத்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இதுகுறித்து அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், ''டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு எலெக்ட்ரிக் நெடுஞ்சாலையை அமைக்க வேண்டும் என்பது எனது கனவு. இது தற்போது முன்மொழியப்பட்ட திட்டமாக உள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டை சேர்ந்த நிறுவனத்துடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்'' என்றார்.
மேலும் பெட்ரோல் மற்றும் டீசலின் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாகவும் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் பேருந்து போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை விரைவில் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். அமைச்சர் நிதின் கட்காரி மிக நீண்ட காலமாக மாற்று எரிபொருட்களின் அவசியத்தை எடுத்துரைத்து கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment