7.5 சதவீதம் இடஒதுக்கீடு ஒரு மிகப்பெரிய புரட்சி: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு ஒரு மிகப்பெரிய புரட்சி என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
7.5 சதவீத சிறப்பு உள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி அண்ணா பல்கலைகழகத்தில் இன்று நடைபெற்றது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கினார்.
இந்தநிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தலைமை செயலாளர் இறையன்பு, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்தது மட்டுமில்லாமல் அந்த வழியில் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கின்ற முதலமைச்சர் 7.5 சதவீதம் என்ற சமூக நீதியை வழங்கி அதற்கான சேர்க்கை ஆணையை வழங்க உள்ளார்.
வரலாறு சொல்லுகின்ற ஒரு ஆணையாக இது இருக்கும். 7.5 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அறிவித்தார். அந்தவகையில் இதை ஒரு மாடல் நீதி கட்சியாக பார்க்க வேண்டியதாக இருக்கிறது.
முதலமைச்சரின் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த ஆட்சியானது அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடைகின்ற வகையில் அமைந்துள்ளது. 150 நாட்களில் எல்லாவற்றையும் படிப்படியாக செய்து வருகிறோம். குறிப்பாக, கல்வித்துறையில் சரியான முடிவை, சரியான நேரத்தில் எடுத்துள்ளார்.
இந்த வருடத்தில் மட்டும் 9 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் வரையிலான மாணவர்கள் இதனால் பயன்பெறப்பொகிறார்கள் என்பதே நமக்கு பெருமை தான்.
கிராமப்புற மாணவர்கள் அண்ணாப் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முடியுமா என்று எண்ணிய காலமும் உண்டு. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கடி ஒன்றை கூறுவார். அதாவது, முதலமைச்சர் உழைப்பதில் 10 சதவீதம் நாம் உழைத்தாலே போதும் நல்ல பெயரை எடுத்துவிடலாம் என்பது தான். நாங்கள் யோசிப்பதை விட இரண்டு மடங்கு அதிகமாக சிந்திக்கிறார் முதல்வர். 7.5 சதவீதம் என்ற அறிவிப்பு ஒரு மிகப்பெரிய புரட்சி. பின்தங்கிய மாணவர்களுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும். இவ்வாறு பேசினார்.
இதைத்தொடர்ந்து, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது: இந்தியாவிலேயே சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் ஒரு முதல்வர் நம் முதல்வர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது என்பது அவரின் சமூக நீதி தத்துவத்தில் உருவான கொள்கை ஆகும். இது ஒரு சமூக நீதி இயக்கம். தற்போது போட்டிபோட்டுக்கொண்டு தனியார் பள்ளிகள் பணம் வசூலித்துக்கொண்டு இருக்கிறது. அதனால் தான் தமிழக முதல்வர் ஒரு முடிவை எடுத்தார்.
அதன்படி, 12ம் வகுப்பில் பள்ளியில் முதலாவதாக வந்தால் நேரடியாக அண்ணாப்பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர முடியும் என்ற நிலையை முதல்வர் உருவாக்கியுள்ளார். அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடிய வகையில் முதல்வர் செயல்பட்டுகொண்டிருக்கிறார். பொறியியல் கல்லூரிகளில் மட்டும் 15,600 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
7.5 சதவீதம் என்பது ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியாக உண்டு. அண்ணாப்பல்கலைக்கழகத்தில் 1 சதவீதம் மாணவர்கள் தான் படிக்க முடியும் என்ற நிலை மாறி தற்போது 7.5 சதவீதம் என்று ஆக உள்ளது.
மாணவர்கள் சமூக நீதி எப்படி வளர்ந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. அடுத்த ஆண்டில் இருந்து ஒவ்வொரு பள்ளி, கல்லூரிலும் தந்தை பெரியாரின் பிறந்தநாளை மாணவர்கள் சமூகநீதி நாளாக கொண்டாட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கலைஞர் இருந்தபோது அண்ணாப்பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் படிக்கலாம் என்பதை கொண்டுவந்தார். எனவே, மாணவர்கள் பொறுப்போடு படிக்க வேண்டும். சிறப்பாக செயல்பட்டு மாணவர்கள் வேலை கொடுப்போறாக மாற வேண்டும். இவ்வாறு கூறினார்
No comments:
Post a Comment