புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மத்தியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று சந்தித்துப் பேசுகிறார்.
இதுகுறித்து மத்தியக் கல்வி அமைச்சகத் தரப்பில் கூறும்போது, ''புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது, எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்களைக் கல்லூரிகளில் நிரப்ப எடுக்கவேண்டிய நடவடிக்கை, ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ விழா கொண்டாட்டம், திறந்தநிலை மற்றும் ஆன்லைன் கல்வி முறைகள், 2021- 22ஆம் கல்வி ஆண்டின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களான தரமதிப்பீட்டுக் கல்வி வங்கி, ஒரே நேரத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் படிக்கும் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியக் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தர்மேந்திர பிரதான் மத்தியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் அனைவரையும் கூட்டாகச் சந்தித்துப் பேசும் முதல் அதிகாரபூர்வக் கூட்டம் இதுவாகும்.
அதேபோல ஐஐடி இயக்குநர்கள் அனைவரையும் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாளை சந்தித்துப் பேசவுள்ளார்.
No comments:
Post a Comment