மதிப்பெண் சான்றிதழில் பிழைகளை தவிர்க்க திட்டம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, August 3, 2015

மதிப்பெண் சான்றிதழில் பிழைகளை தவிர்க்க திட்டம்

பிழையின்றி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதற்காக அவர்களின் பெயர் விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை சரிபார்த்து பெற்றோர், ஆசிரியர், தலைமையாசிரியர் கையெழுத்திட வலியுறுத்தப்பட்டுள்ளது.

வழக்கமாக மார்ச்சில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள் பள்ளிகளில் இருந்து அதற்கு முந்தைய அக்டோபர், நவம்பரில் சேகரிக்கப்படும். அதில் அவசரம் காட்டப்படும்போது, பின்னர் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழில் பெயர் எழுத்துக்கள், பிறந்த தேதி உள்ளிட்டவற்றில் பிழைகள் ஏற்படுவதுண்டு.

இதை தவிர்க்க அடுத்தாண்டு மார்ச்சில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் விவரங்களை, அதற்கான விண்ணப்பங்களில் நிரப்பி தயார் நிலையில் வைக்க தலைமையாசிரியர்களுக்கு அரசு தேர்வுகள்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

விண்ணப்பங்களில் புகைப்படத்துடன் மாணவரின் பெயர், பிறந்த தேதி, மீடியம், ஜாதி, மதம், பெற்றோர் பெயர், அவர்களின் அலைபேசி எண் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. ஆதார் எண், ரேஷன் கார்டு எண் குறித்து தெரிவிக்க கூறப்பட்டுள்ளது.

ஆனால் அது கட்டாயமில்லை. இம்முறை பாலினத்தில் ஆண், பெண்ணிற்கு அடுத்து திருநங்கை என, புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது. இத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அடுத்தாண்டு மார்ச் 1ல், 14 வயது பூர்த்தியடைந்துஇருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை முழுமையாக நிரப்பி சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோர், வகுப்பு ஆசிரியர், பள்ளி தலைமையாசிரியர் சரிபார்த்து கையெழுத்திட வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பெயர், பிறந்த தேதி ஆகியவற்றில் ஏற்படும் பிழைகள் தவிர்க்கப்படும். பின் தேர்வுத்துறை கூறும் நாளில் இவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment