தினசரி 16,000 குழந்தைகள் மரணம்: உலக சுகாதார நிறுவனம் தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, September 14, 2015

தினசரி 16,000 குழந்தைகள் மரணம்: உலக சுகாதார நிறுவனம் தகவல்

ஐந்து வயது நிரம்பாத 16,000 குழந்தைகள் தினசரி மரணம் அடைவதாக என்று ஐ.நா. அமைப்பான உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை தெரிவிக்கிறது.
உலகக் குழந்தைகள் சுகாதார நிலை குறித்து, உலக சுகாதார நிறுவனமும், ஐ.நா. குழந்தைகள் நிதியமும் (யுனிசெப்) இணைந்து வெளியிட்டிருக்கும் 2015-ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் புள்ளிவிவரங்களைக் கருத்தில் கொள்ளும்போது, ஆண்டுதோறும் நிகழும் குழந்தைகளின் உயிரிழப்பு 50 சதவீதம் குறைந்துள்ளது.
1990-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, 5 வயதுக்குட்பட்ட 1.27 கோடி குழந்தைகள் உயிரிழந்தன.
தற்போதைய 2015-ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த எண்ணிக்கை 60 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.
நாள்தோறும் 16,000 குழந்தைகள் உயிரிழப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதில் பாதி எண்ணிக்கை ஊட்டச்சத்துக் குறைவினால் ஏற்படுகின்றன.
28 நாட்கள் நிரம்பாத பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பது 45 சதவீத அளவாக உள்ளது.
2000-ஆம் ஆண்டிலிருந்து, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் 4.8 கோடி குழந்தைகள் உயிர் பிழைத்துள்ளன.
ஊட்டச் சத்துக் குறைவு தவிர பல்வேறு நோய்களும் குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமாக உள்ளன.
பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்கள், நிமோனியா, வயிற்றுப்போக்கு, மலேரியா ஆகியவை பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்புக்கு முக்கியக் காரணங்களாகும்.
ஆப்பிரிக்க நாடுகளில் இது போன்ற மரணங்கள் அதிக அளவில் சம்பவிக்கின்றன.
செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறவுள்ள உலக சுகாதார அமைப்பு மாநாட்டில், நோய் தடுப்பு தொடர்பாக அடுத்த 15 ஆண்டுகளுக்கான செயல் திட்டங்களும் இலக்குகளும் நிர்ணயிக்கப்படவிருக்கின்றன என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
யுனிசெப் அமைப்பின் துணைச் செயல் இயக்குநர் கீதா ராவ் இது தொடர்பாகக் கருத்து தெரிவிக்கையில், கடந்த கால் நூற்றாண்டில் உலகெங்கும் குழந்தைகளின் மரணங்களைக் குறைக்கும் முயற்சியில் நாம் வெற்றி அடைந்துள்ளபோதிலும், இன்னும் மகத்தான சவால்களை சந்தித்து வருகிறோம்.
எனினும் ஊட்டச் சத்துக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் குழந்தைகள் உயிரிழப்பு நேரிடுவது தொடர்கிறது என்பது வருத்தம் அளிக்கக் கூடியதாகும்.
மிகவும் எளிய பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் ஆண்டுதோறும் 3.8 கோடி பச்சிளம் உயிர்களைக் காக்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment