ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கேசவ ரெட்டி கல்வி நிறுவனம் சார்பில் ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 40 ஆயிரம் மாணவர்கள் இந்த கல்வி நிறுவனங்களில் படித்து வருகிறார்கள். இதன் தலைவராக கேசவ ரெட்டி உள்ளார்.
இந்த கல்வி நிறுவனம் மாணவர்கள் சேர்க்கையில் புதிய நடைமுறையை கையாண்டது. அதாவது பள்ளியில் எல்.கே.ஜி. சேரும் மாணவர்களிடம் பெருந்தொகை டெபாசிட்டாக வசூலிக்கப்படும். அந்த தொகை மூலம் கிடைக்கும் வட்டியை கல்வி கட்டணமாக எடுத்துக் கொள்ளப்படும். பள்ளி இறுதி படிப்பை முடித்து வெளியேறும் போது அந்த மாணவர்கள் கட்டிய டெபாசிட் தொகை அவர்களுக்கு திருப்பி செலுத்தப்படும்.
இந்த புதிய நடைமுறை மூலம் மாணவர்கள் வருடா வருடம் கல்வி கட்டணம் செலுத்த தேவையில்லை.
இந்த வகையில் ஒவ்வொரு மாணவரிடம் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை டெபாசிட் தொகை வசூலிக்கப்பட்டது.
ஆனால் பள்ளி நிர்வாகம் கூறியபடி மாணவர்களுக்கு டெபாசிட் தொகை திருப்பி கொடுக்கப்படவில்லை. இந்த வகையில் ரூ.480 கோடியை கேசவ ரெட்டி மோசடி செய்து விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த கர்னூல் போலீசார் நேற்று கேசவ ரெட்டியை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு 23–ந்தேதி வரை நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
மாணவர்களிடம் வசூலித்த தொகையில் கேசவ ரெட்டி ரூ.10 கோடிக்கு பள்ளி வாகனம் வாங்கி உள்ளார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலில் பல கோடி பணத்தை முடக்கி உள்ளார். ரியல் எஸ்டேட் வியாபாரம் மந்தமானதால் அவரால் பணத்தை திருப்பி கட்ட முடியவில்லை என்று கூறப்படுகிறது.
கேசவ ரெட்டி கைதானாலும் அவரது கல்வி நிறுவனம் பாதிப்பு இல்லாமல் நடத்தப்படும் என்று ஆந்திர கல்வி மந்திரி கூறினார்.
No comments:
Post a Comment