அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சலிங்கை உடனடியாகநடத்த வேண்டும்' என வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம், அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் நடந்தது. தமிழகத்தில் உள்ள, 76 அரசு கலை கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சலிங், ஆண்டுதோறும், ஜூன் மாதம் கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தால் நடத்தப்படுகிறது. நடப்பு, 2015-16ம் கல்வி ஆண்டுக்கான கவுன்சலிங் இதுவரை நடத்தவில்லை.
இந்நிலையில், ஆசிரியர் இடமாறுதல் கவுன்சலிங்கை உடனடியாக நடத்த வலியுறுத்தி,தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் நடந்தது. கிளைத்தலைவர் சுந்தரசோழன் வரவேற்றார். பேராசிரியர் பழனிவேலு முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் வெங்கடாஜலம் தலைமை வகித்து பேசியதாவது: தமிழக உயர் கல்வித் துறையானது, ஆசிரியர் கவுன்சலிங்கை நடத்தாமல் காலம் தாழ்த்துகிறது. உடனடியாக பொது ஆசிரியர் கவுன்சலிங்கை முறையாக நடத்த வேண்டும். கல்லூரி கல்வி இயக்குனர் மற்றும் மண்டல இணை இயக்குனர்களை முன்புஇருந்தது போல், பணிமூப்பு அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்யவேண்டும்.
1998ம் ஆண்டு முதல், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுபணியில் சேர்ந்துள்ள கல்லூரி ஆசிரியர்களுக்கான, பணிமூப்பு பட்டியலை வெளியிட்டு ஆசிரியர்கள் இடையே நிலவும் குழப்ப சூழ்நிலையை தவிர்க்க வேண்டும். மேலும், 2011ல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, பணிவரன்முறை, தகுதிகாண் பருவம் முடித்தமைக்கான ஆணைகளை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, கண்டன கோஷம் எழுப்பினர். ஆசிரியர் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment