மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் நேற்று வகுப்புகள் தொடங்கின. புதிய மாணவிகளுக்கு சீனியர் மாணவிகள் பூ கொடுத்து வரவேற்றனர்.
வகுப்புகள் தொடங்கின
தமிழ்நாட்டில் 20 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்னன. அந்த கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கான கலந்தாய்வை மருத்துவக்கல்வி இயக்குனரகம் நடத்தியது. கலந்தாய்வு மூலம் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்தனர்.
அவ்வாறு எம்.பி.பி.எஸ். சேர்ந்த மாணவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நேற்று தமிழ்நாடு முழுவதும் வகுப்புகள் தொடங்கின.
பூ கொடுத்து வரவேற்பு
வகுப்புகள் தொடங்கும் முன்பாக அந்தந்த மருத்துவக்கல்லூரி டீன்கள், பயிற்சி வகுப்பை மாணவ-மாணவிகளுக்கு நடத்தினார்கள். சென்னையில் மத்திய சிறைச்சாலை முன்பு இருந்த இடத்தில் சென்னை மருத்துவக்கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
அந்த கட்டிடத்தில் நேற்று பயிற்சி வகுப்பு தொடங்கியது. அப்போது சீனியர் மாணவ- மாணவிகள் புதிதாக வந்த மாணவ-மாணவிகளை ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் எஸ்.கீதா லட்சுமி பேசியதாவது:-
ராக்கிங் இல்லாத
பாரம்பரியமிக்க சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ள நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். அதுபோல உங்களுடன் வந்துள்ள பெற்றோர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். அவர்களும் நீங்கள் இந்த கல்லூரியில் படிப்பதற்கு காரணமாக உள்ளனர்.
மருத்துவக்கல்லூரிகள் ராக்கிங் இல்லாத இடமாக இருக்கவேண்டும் என்பது அரசின் நோக்கம். அந்த நோக்கத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.
ஒவ்வொரு கல்லூரியிலும் ராக்கிங்கை தடுக்க தனி கமிட்டியும், ராக்கிங் நடக்காமல் இருக்க மாணவ-மாணவிகளை கண்காணிக்கவும் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் கல்லூரி முதல்வர்கள் ஒட்டுமொத்தமாக கண்காணிப்பார்கள். யார் ராக்கிங்கில் ஈடுபட்டாலும் அவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்படுவார்கள்.
மதுவின் தீமைகள்
மேலும் ஒவ்வொரு கல்லூரியிலும் மனோதத்துவ மருத்துவர், மன நல நிபுணர், மன நல ஆலோசகர் ஆகிய 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அந்த 3 பேர்களும் மாணவ-மாணவிகளிடம் ராக்கிங்கில் ஈடுபடக்கூடாது என்று கூறுவார்கள். மேலும் கல்லூரி வளாக பிரச்சினைகள் இருந்தால் அந்த பிரச்சினையை போக்குவது பற்றி பேசுவார்கள். மதுவின் தீமைகள் பற்றி எடுத்துக்கூறுவார்கள். இப்படி கூறுவதால் மாணவ-மாணவிகள் எந்தவித தீய செயலிலும் ஈடுபடமாட்டார்கள். 3-வது கட்ட மருத்துவ கலந்தாய்வு 15-ந் தேதிக்கு பின்னர்தான் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு டாக்டர் கீதா லட்சுமி தெரிவித்தார்.
விழாவில் கல்லூரி டீன் டாக்டர் விமலா குத்துவிளக்கு ஏற்றினார். பேராசிரியர் டாக்டர் சுதாசேஷய்யன் உள்பட பலர் பேசினார்கள்.
No comments:
Post a Comment