தமிழகத்தில் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் முதல் தவணை தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட 70 லட்சம் குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 43,051 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட உள்ளன. முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1,652 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்குவதற்காக சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட உள்ளனர். இரண்டாம் தவணை தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 21-ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்பு செயலாளர் பி.செந்தில்குமார், மருத்துவக்கல்வி இயக்குநர் (பொறுப்பு) ஆர்.விமலா, பொது சுகாதாரத்துறை இயக்குநர் (டிபிஎச்) கே.குழந்தைசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment