மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
மேலடுக்கு சுழற்சி
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து
அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான மேலடுக்கு சுழற்சியால், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.
இந்தநிலையில் அந்த மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:–
2 நாட்களுக்கு மழை
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியின் வளிமண்டலத்தில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகி இருக்கும் காரணத்தால் கடந்த 24 மணி நேரத்தில்(நேற்று) வடதமிழகத்தில் பரவலாக மழை பெய்து இருக்கிறது. அந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) தமிழகத்தில் மழை பெய்யும்.
அதாவது, வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக இரவு அல்லது அதிகாலை நேரங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதியில் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கவனமாக இருக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மழை அளவு
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–
மாமல்லபுரம், சென்னை நுங்கம்பாக்கம், செம்பரம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ., டி.ஜி.பி. அலுவலகம் 5 செ.மீ., திருவள்ளூர், கோலப்பாக்கம், கே.வி.கே.காட்டுக்குப்பம், புழல், ஸ்ரீபெரும்புதூர், எச்.வி.எப். ஆவடி ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ., செங்கல்பட்டு, பூந்தமல்லி, உத்திரமேரூர், சென்னை மீனம்பாக்கம், சீர்காழி, தேவலா, செங்குன்றம், அண்ணா பல்கலைக்கழகம், திருப்பத்தூர்(சிவகங்கை), பூண்டி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பெய்து உள்ளது.
No comments:
Post a Comment