தமிழக அரசு புதிய ஆசிரியர்களை நியமிக்காததால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முதல் பி.எட்., எம்.எட்., ஆசிரியர் கல்வி படிப்புகளின் படிப்பு காலம், இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. அதன்படி, முதல் செட் மாணவர்களுக்கான, இரண்டமாண்டு வகுப்புகள், ஆக., 23ம் தேதி முதலும், முதலாமாண்டு பி.எட்., மாணவர்களுக்கு 7ம் தேதியும் வகுப்புகள் துவங்கின.
இந்நிலையில், அரசு கல்வியியல் கல்லுாரிகளில் முதல் மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களை கையாள ஆசிரியர்கள் பற்றாக்குறையால், பெரும்பாலான வகுப்புகள் நடப்பதில்லை. இதனால், தற்போதுள்ள ஆசிரியர்கள் கடும் பணிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி.இ.,) வழிகாட்டுதல்படி, பி.எட், மாணவர்களுக்கு பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் என்ற பிரிவுகளின் அடிப்படையில், 16 பேரும், எம்.எட்., மாணவர்களுக்கு 10 பேர் உட்பட, பி.எட்., எம்.எட்., செயல்படும் ஒரு கல்வியியல் கல்லுாரியில், 26 ஆசிரியர்கள் இருப்பது கட்டாயம். ஆனால், தமிழக கல்வியியல் கல்லுாரிகளில், எட்டு அல்லது ஒன்பது ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். கல்வியாளர் பாரதி கூறுகையில், என்.சி.டி.இ., வழிகாட்டுதலின்படி, கல்வியியல் கல்லுாரிகளில், எம்.எட்., பி.எட்., மாணவர்களை கையாள, 26 ஆசிரியர்கள் இருக்க வேண்டியது அவசியம். ஆனால், பெரும்பாலான பணிகள் நிரப்பப்படவில்லை. இரண்டாண்டுகள் உயர்த்திய அரசு, ஆசிரியர் நியமனத்திலும் உரிய கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, கோவை அரசு கல்வியியல் கல்லுாரியில், ஒன்பது ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். ஓராண்டு கால முறையிலேயே, கணிதம், வரலாறு பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாமல் இருந்தது. தற்போது, மாணவர்களை கையாள முடியாமல் சக ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். இதே நிலை அனைத்து கல்லுாரிகளிலும் உள்ளது, என்றார்.
No comments:
Post a Comment