தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் பதவியில் நீடிப்பதாக, டாக்டர் செந்திலும், அவர் நீக்கப்பட்டு விட்டதாக, துணைத்தலைவர் டாக்டர் ஜெயலாலும் கூறுவதால், உண்மையான தலைவர் யார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், அதன் தலைவரால் நிர்வகிக்கப்படுகிறது. அவருக்கு உதவ துணைத் தலைவர், செயற்குழு உறப்பினர்கள், பதிவாளர் ஆகியோர் உள்ளனர். இவர்களை தேர்ந்தெடுக்க 10 பேர் கொண்ட உறுப்பினர் குழு உள்ளது. உறுப்பினர் குழுவிற்கு, கவுன்சிலில் பதிவு செய்துள்ளவர்களில் இருந்து 7 பேர், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மூன்று பேரை அரசு நியமிக்கிறது.
சிண்டிகேட் அமைப்பு:
இந்நிலையில், சில ஆண்டுகளாக தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிகளை பெற சிலர் மட்டும் சிண்டிகேட் அமைத்து செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்படி, தலைவர் பதவியையும், செயற்குழு உறுப்பினர் பதவிகளையும் தங்களுக்குள் செய்துள்ள ஒப்பந்தத்தின் படி, ஒருவர் மாற்றி ஒருவர் அனுபவித்து வருகின்றனர்.
ஒப்பந்தத்தை மீறாமல் இருக்க, தலைவர் பதவியில் அமர்பவரின் ராஜினாமா கடிதத்தை பதவியேற்பு நாளிலேயே வாங்கி வைத்து விடுகின்றனர். 2014 -15ல் கவுன்சில் தலைவராக இருந்த டாக்டர் துரைராஜ், தன்னை தலைவர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது எனக் கோரி நீதிமன்றம் சென்றார்.
ஆனால், அங்கு எதிர்தரப்பு சில ஆதாரங்களோடு அவரது ராஜினாமா கடிதத்தையும் சமர்ப்பிக்க, அவருக்கு பதிலாக டாக்டர் பாலகிருஷ்ணனை தலைவராக நியமித்தது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
யார்தான் தலைவர்:
தலைவர் பதவி குறித்து டாக்டர் செந்தில் கூறுகையில், கவுன்சில் தலைவராக நான் நீடிக்கிறேன். இது குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது, என்றார்.
ஆனால், டாக்டர் ஜெயலால் கூறுகையில், நான் துணைத்தலைவராக இருப்பதோடு, தலைவர் (பொறுப்பு) பதவியிலும் உள்ளேன். விரைவில் பொதுக்குழுவில், அதிகாரப்பூர்வ தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளேன். தற்போது, கவுன்சில் சார்பில் அளிக்கப்படும் அனைத்து சான்றிதழ்களிலும், தலைவர் என்ற முறையில் என்னுடைய கையொப்பமே இடம் பெறுகிறது, என்றார்.
இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் இணையதளத்தில், டாக்டர் ஜெயலால் துணைத்தலைவர் மற்றும் தலைவர் (பொ) பதவியை வகிப்பதாகவும், டாக்டர் செந்தில் உறுப்பினராக உள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, டாக்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முறைகேடுகள் நடப்பதாக கூறி, மருத்துவ கவுன்சில்களை கலைத்துவிட்டு புதிய அமைப்பை ஏற்படுத்த, ஏற்கனவே மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிண்டிகேட் முறையில் பதவி பரிமாற்றம்
டாக்டர் பிரகாசம் 2006 - 2011 வரை மற்றும் 2012 -- 14 வரையிலான கால கட்டங்களில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர். தற்போது செயற்குழு உறுப்பினர்.
டாக்டர் அஷ்ரப்- 2011 -- 12ல் தலைவர். தற்போது செயற்குழு உறுப்பினர்.
டாக்டர் துரைராஜ் 2014 -- 15ல் தலைவர். பதவி நீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்று தற்போது கவுன்சில் நடவடிக்கைகளில் இருந்து விலகி உள்ளார்.
டாக்டர் பாலகிருஷ்ணன் 2015 -- 16ல் தலைவர். தற்போது செயற்குழு உறுப்பினர். டாக்டர் செந்தில் 2016ல் சில மாதங்கள் தலைவர். தற்போது இவருக்கும் ஜெயலாலுக்கும் இடையே பதவி பிரச்னை ஏற்பட்டுள்ளது.
பதவியால் என்ன லாபம்:
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கமாக செயல்படுகிறது. மருத்துவ கல்வி விவகாரங்களைத் தவிர, இந்திய மருத்துவ கவுன்சிலின் அனைத்து வேலைகளையும் செய்கிறது.
டாக்டர்களை பதிவு செய்து அங்கீகரித்தல், பயிற்சி அளித்தல், அடையாள அட்டை வினியோகித்தல், நன்னடத்தை சான்றிதழ் வழங்குதல், ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல், மருத்துவமனைகளை அங்கீகரித்து அவர்களுக்கு ஸ்மார்ட் பெயர் பலகை வழங்குதல் போன்ற பணிகள் ஒவ்வொன்றுக்கும், ஒரு மறைமுக ரேட் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒழுங்கு நடவடிக்கையில் இருந்து தப்ப, டாக்டர்களிடம் இருந்து பல லட்சங்கள் வரை லஞ்சம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment