பள்ளிகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதால் பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும்: பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 25, 2021

பள்ளிகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதால் பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும்: பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

பள்ளிகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதால் பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும்: பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

         பள்ளிகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் அரசு மேல்நிலைப் பள்ளியில், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மாண்டிசோரி வகுப்பை நேற்று பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி, 

            பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குழந்தைகளுக்கான உதவி எண் பாலியல் தொந்தரவுகள் குறித்த புகார்களைத் தெரிவிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள இலவச அழைப்பு எண்கள் 1098, 14417குறித்து பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வரும் கல்வியாண்டில் அனைத்து பாடப் புத்தகங்களிலும் குழந்தைகளுக்கான உதவி எண்கள் அச்சிடப்படும். போக்ஸோ சட்டம் குறித்துஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே பல்வேறுஅறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 

        இதேபோல, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்க வேண்டியது அவசியம். தங்கள் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று எண்ணாமல், மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தக் கூடிய வகையில் தனியார் பள்ளி நிர்வாகங்கள் செயல்பட வேண்டும். மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ள ஏதுவாக பாடத்திட்டம் 35 முதல் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. 

            எனவே, நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும். 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில், மாணவர்கள் 1 முதல் 10-ம் வகுப்பு வரை எந்த பயிற்று மொழியில் படித்தார்கள் என்ற விவரம் குறிப்பிடப்படும். கரோனா பாதிப்பால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியைச் சரிசெய்ய, இல்லம் தேடி கல்வித் திட்டம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கான தன்னார்வலர்களைத் தேர்வு செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment