சாலையில் பழம் விற்ற பணத்தில் பள்ளிக்கூடம் கட்டிய பெரியவர்: பத்மஸ்ரீ விருது பெற்றவருக்கு குவியும் பாராட்டுகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 10, 2021

சாலையில் பழம் விற்ற பணத்தில் பள்ளிக்கூடம் கட்டிய பெரியவர்: பத்மஸ்ரீ விருது பெற்றவருக்கு குவியும் பாராட்டுகள்

சாலையில் பழம் விற்ற பணத்தில் பள்ளிக்கூடம் கட்டிய பெரியவர்: பத்மஸ்ரீ விருது பெற்றவருக்கு குவியும் பாராட்டுகள்                     கர்நாடகாவில் சாலையில் பழம்விற்ற பணத்தில் பள்ளிக்கூடம் கட்டிய ஹரேகலா ஹாஜப்பாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப் பட்டுள்ளது 

         கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னட மாவட்டம் மங்களூரு அருகேயுள்ள நியூபடப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரேகலா ஹாஜப்பா (68). இவர் மங்களூரு பேருந்து நிலையத்தில் ஆரஞ்சு, கொய்யா உள்ளிட்ட பழங்களை விற்று வந்தார். இதன் மூலம் நாளொன்றுக்கு ரூ.150 வரை சம்பாதித்தார்.சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்2 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இவரிடம் ஆரஞ்சு பழத்தின்விலையைக் கேட்டனர். 

        அவருக்கு ஆங்கிலம் தெரியாததால் அவர்களுடன் பேச முடியவில்லை.இதனால் வருத்தம் அடைந்த ஹாஜப்பா, தன்னைப் போன்று கல்வி கற்க முடியாமல் இருக்கும் தன் கிராம மக்களுக்காக பள்ளிக்கூடம் தொடங்க வேண்டும் என நினைத்தார். இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தார். நீண்ட காலம் காத்திருந்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. 

                இதையடுத்து மத அமைப்புகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரிடம் பள்ளி தொடங்க உதவுமாறு ஹாஜப்பா கோரினார். ஆனால் யாரும் அவரது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இதனால், தான் பழம் விற்ற பணத்தை சிறிது சிறிதாக சேமித்து தனது கிராமத்தில் பள்ளிக்கூடம் கட்ட முடிவெடுத்தார். 

                அதன்படி, 2001-ம் ஆண்டு தன் சேமிப்பு பணத்தில், பள்ளிக்கூடம் கட்ட நிலம் வாங்கினார். பின்னர் வங்கியில் கடன் வாங்கி நியூபடப்பு கிராமத்தில் தொடக்கப்பள்ளியை நிறுவினார். 27 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட அந்த பள்ளியில் தற்போது 178 மாணவர்கள் படிக்கின்றனர். ஹாஜப்பாவுக்கு பள்ளியை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால், 2014-ம் ஆண்டு ஜூம்மா மதராஸாவின் முஸ்லீம் கல்வி நிறுவனத்துடன் பள்ளி இணைக்கப்பட்டது. பின்னர் தொடக்கப்பள்ளி உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 

             ஹரேகலா ஹாஜப்பாவின் இந்த சேவையைப் பாராட்டி கடந்த திங்கள்கிழமை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார். இதுகுறித்து ஹரேகலா ஹாஜப்பா மங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் பள்ளிக்கூடம் இல்லாததால் எனக்கு கல்வி கற்கும் வசதி கிடைக்கவில்லை. என்னைப் போன்றே என் கிராமத்தில் பலருக்கும் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. வறுமையின் காரணமாக எல்லோரும் தங்களுக்கு தெரிந்த வேலையை செய்து, பிழைப்பு நடத்தி கொண்டிருக்கின்றனர். என் வாழ்வில் வெளிநாட்டவர்களின் மூலம் ஒரு திருப்பம் ஏற்பட்டது. 

            அவர்களுடன் என்னால் ஆங்கிலத்தில் பேசி ஆரஞ்சு பழங்களை விற்க முடியாததால் மனதளவில் மிகுந்த கஷ்டத்துக்கு ஆளானேன். படிக்காததால் வாய் இருந்தும் ஊமையாக இருந்ததை நினைத்து வருந்தினேன். அப்போது தான், எனக்கு கல்வி பற்றிய யோசனையே வந்தது. பள்ளிக்கூடம் கட்ட எனக்கு அரசோ, தனியாரோ உதவவில்லை. நானாக கஷ்டப்பட்டு பள்ளிக்கூடம் கட்டி ஆயிரக்கணக்கானோர் கல்வி கற்க உதவினேன். இப்போது எனது கிராமத்தில் பள்ளிக்கூடம் செல்லாத ஒரு குழந்தை கூட இல்லை. 

                எனக்கு கிடைத்த நன்கொடைகள், விருதுகளின் மூலம் வந்த பணம் அனைத்தையும் பள்ளிக்கே வழங்கினேன். இப்போது 10-ம் வகுப்பு வரை உள்ள பள்ளியில் மேல்நிலை வகுப்புகளும், கல்லூரியும் தொடங்க வேண்டும் என திட்டமிட்டிருக்கிறேன். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment