செப்டம்பர் 15-இல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: சந்தீப் சக்சேனா தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 19, 2015

செப்டம்பர் 15-இல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: சந்தீப் சக்சேனா தகவல்

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 15-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:
தில்லியில் அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. அதில், தேர்தல் ஆணையத்தின்
செயல்பாடுகளை மின்னணுமயமாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 
இதற்காக ஆறு பேர் கொண்ட குழு தனியே அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் நானும் இடம் பெற்றுள்ளேன்.
வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி, விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டத்தின் கீழ் ஆதார் எண் பெறுவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. 
உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும், இறுதி உத்தரவு பிறக்கப்படும்போது அதுதொடர்பாக மறு உத்தரவை தேர்தல் ஆணையம் வெளியிடும். 
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ஆம் தேதி வெளியிடப்படும். இந்த வரைவு வாக்காளர் பட்டியல் மாநிலத்திலுள்ள 64,094 வாக்குச் சாவடிகளில் வெளியாகும்.
வாக்குச் சாவடிகளை வரைமுறைப்படுத்தும் பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை ஒரு சில ஆயிரங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 
வாக்குச் சாவடிகளை வரைமுறைப்படுத்துவது, வாக்குச் சாவடிகளை இறுதி செய்வது தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கோருவது ஆகிய பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்வர். 
தேர்தல் அதிகாரிகள் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்டையில், இறுதி உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பிக்கும்.
வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டத்தின் கீழ், வீடுகளில் குடியிராத, இடம் மாறிய, இறந்த வாக்காளர்களின் பட்டியலை மீண்டும் சரிபார்க்குமாறு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கோரப்பட்டுள்ளனர் என்றார் சந்தீப் சக்சேனா.

No comments:

Post a Comment