நான் பள்ளியில் படிக்கும்போது மிகவும் வெறுத்தது கணித வகுப்பு. ஆனால், இன்று நான் கணித ஆசிரியர்.
என் கணித ஆசிரியர் மீது இருந்த கோபமே என்னை அந்த வகுப்பில் என்னை சரியாக படிக்கவிடாமல் செய்தது. விளைவு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில்
குறைந்தபட்ச மதிப்பெண். அதனால், பொறியாளராக வேண்டும் என்ற கனவு கலைந்தது.
அப்போதுதான் உணர்ந்தேன். ஆசிரியர் மீதான கோபம் நம்மீது நாமே கோபப்படுவது போல் என.
என்னை போல் யாரும் ஆசிரியர் மீது கோபம் கொண்டு தன் வாழ்க்கையை வீணாக்கி விட கூடாது என முடிவெடுத்தேன்.
ஆகையால் ஆசிரியராக வேண்டும். அதிலும் கணித பாட ஆசிரியர் ஆக வேண்டும் என்று முடிவு செய்து கல்லூரியில் சேர்ந்தேன்.
நண்பர்கள் கொடுத்த ஒத்துழைப்பு மற்றும் என் முயற்சியால் கல்லூரி படிப்பில் தேர்ச்சி பெற்றேன். ஆனால் இரண்டாவது நிலையிலே தேர்ச்சி பெற முடிந்தது.
ஆனால், என்னால் எட்டமுடியாத உயரத்தை என் மாணவர்களை எட்டச் செய்வது என முடிவெடுத்து இளம் கல்வியியல் பிரிவில் இணைந்தேன்.
ஆசிரிய பணி மீது கொண்ட ஈடுபாடு காரணமாக அப்பாடப் பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். தேர்வு முடிவு வெளியாகும் முன் ஓர் அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக கணித ஆசிரியராக இணைந்தேன். தற்போதும் அங்கு தான் பணிபுரிந்து வருகிறேன்.
அப்பள்ளியானது 150 ஆண்டுகள் கடந்தும் கல்விப்பணியில் சிறப்புற செயல்படும் பள்ளி. 2014-2015 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு ஆங்கிலவழி கணித பாடம் கற்பிக்க பள்ளி உத்தரவிட்டது.
முதல் நாள் பத்தாம் வகுப்புக்குள் நுழையும்போது என் கால்கள் படபடத்ததன.
மாணவர்களிடம் மென்மையாக என் பேச்சை தொடங்கி, அவர்களும் என்னைப் போல கணித பாடத்திற்கு பயந்தவர்கள் மத்தியில் அவர்கள் பயத்தை போக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றேன். வழக்கமாக ஆசிரியர் பணியில் ஆசிரியர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினை எனக்கும் நேர்ந்தது.
கோபத்தில் ஒரு பத்தாம் வகுப்பு மாணவனை கடுமையாக பேசிவிட, அம்மாணவனின் தந்தை பள்ளிக்கு வந்து என்னை சந்தித்தார். 'ஏன் என் மகனை கண்டித்தீர்கள்?' என கேட்டார். "அவன் செய்த தவறை ஒரு தந்தையாக நீங்கள் கண்டிக்கும் போது, இன்னொரு தந்தையாக நான் கண்டிக்ககூடாதா? அந்த உரிமை எனக்கு இல்லையா?" என கேட்டேன். பிறகு அம்மாணவனை அழைத்து அவனுக்கு புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தேன். அவன்தான் என் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவன்.
அந்த வகுப்பிலே மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவர்களை கண்டறிந்து, அவர்கள் பெற்றோரை அழைத்து பேசினேன்.
ஒரு மாணவரின் தந்தை இவன் தேர்ச்சி பெறமாட்டான் என சொல்லிவிட்டு சென்றார். அவன் 312 மதிப்பெண் பெற்றது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
என் வகுப்பு மாணவன் அவ்வருடம் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றான்.
என் மாணவர்களை தேர்வுக்காக தயார் செய்யும்போது கேள்வித்தாள் நோக்கிலும், உளவியல் ரீதியான கேள்விக்களில் எவ்வாறு மதிப்பெண்கள் குறைகிறது என்பன குறித்து ஆராய்ந்து அவ்வாறு நடத்தி தேர்வு வைக்கும் பொழுது மாணவர்கள் பிரகாச'மாணவர்களாக' மாறுவர்.
அடிக்கடி மாணவரிடம் பொதுவான செய்திகள் குறித்த கலந்துரையாடல், சுயமாக கேள்வி கேட்டு பதில் கூறுதல்,
தானே ஆசிரியராக இருந்து புரியவைத்தல்.. புரிந்து கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் அவர் திறன் மிக்கவர்களாக மாறுவர் என்பது என் தாழ்மையான கருத்து.
- வேல்பிரகாஷ், பள்ளி ஆசிரியர் - தொடர்புக்கு 9894429992
No comments:
Post a Comment