பள்ளிக்கு இனி 'கட்' அடிக்க முடியாது; பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்., பறக்கும். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 13, 2016

பள்ளிக்கு இனி 'கட்' அடிக்க முடியாது; பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்., பறக்கும்.

நாடு முழுவதும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால், பெற்றோருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் நடைமுறைஅறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இணையதளம் துவக்கம்:

டில்லியில் நேற்று, உயரதிகாரிகள் கூறியதாவது:கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் சிலர், ஏதாவதொரு காரணத்துக்காக, பள்ளிக்கு வராமல், 'கட்' அடிப்பதாக புகார்கள் வருகின்றன. பல சந்தர்ப்பங்களில், தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகள் பற்றி, பெற்றோருக்கு எதுவும் தெரியாமல் போகிறது. ஆசிரியர்களுடன் நேரடியாக பேசும்போது மட்டுமே, குழந்தைகள் பற்றி, பெற்றோருக்கு தெரிய வருகிறது.இதற்கு தீர்வாக, மாணவர்களின் வருகைப்பதிவு, வீட்டுப்பாடம், வகுப்பு தேர்வு முடிவுகள், உடல் நலன் தொடர்பான தகவல்கள், தேர்வு அட்டவணை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை, இணையம் மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலம், பெற்றோருக்கு தெரிவிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, 'ஷால தர்பண்' என்ற பெயரில் இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் நுழைவதற்கான, 'லாக்இன்' குறியீடும், 'பாஸ்வேர்ட்'டும், மாணவர்களின் பெற்றோருக்கு அனுப்பப்பட்டு வருகிறது.எஸ்.எம்.எஸ்., அனுப்பும் பணிகள், அடுத்த மாதம் முதல் துவங்கும். காலையில் பள்ளிக்கு வராத மாணவர் பற்றிய தகவல், பெற்றோருக்கு அன்றைய தினமே, எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும். கேந்திரிய வித்யாலயாவின் புதிய இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி என்பதை, மின்னணுவியல் முறையில் விளக்கும், 'இ - டுடோரியல்ஸ்' வழங்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

'டிஜிட்டல்'மயமாகிறது:

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த தகவல்கள், 'டிஜிட்டல்' முறையில் மாற்றும் பணிகள் ஏற்கனவே முடிந்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகளால், தனியார் பள்ளிகளை தவிர்த்து, அரசு பள்ளிகளில், குழந்தைகளை சேர்க்க, பெற்றோர் ஆர்வம் காட்டுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

12 லட்சம் மாணவர்கள்

நாடு முழுவதும், 1,100 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை,மத்திய அரசு நடத்தி வருகிறது. இவற்றில், 12 லட்சம் பேர் படிக்கின்றனர். பல மாணவர்கள், பள்ளிகளுக்கு வராமல், அடிக்கடி, 'கட்' அடிப்பது, பெரும் பிரச்னையாக உள்ளது. இதைத் தடுக்கும் நோக்கில், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment