சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்படாது என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று கூறும்போது, ''சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு குறித்த நேரத்தில் வெளியாகும். இதில் தாமதம் ஏற்படாது. இதுகுறித்து
சிபிஎஸ்இ விரைவில் அறிவிப்பு வெளியிடும். அனைவருக்கும் நீதி கிடைக்கும். எனவே மாணவர்கள் இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை'' என்றார்.
சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கும் முறையை கைவிட முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், கருணை மதிப்பெண் வழங்கும் முறையை கைவிடக்கூடாது என உத்தரவிட்டது. இதன் காரணமாக தேர்வு முடிவு வெளியாவது தாமதமாகி வருகிறது.
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஜவடேகர் தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு சட்ட வல்லுநர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் தேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment