தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வக்கீல் நம்புராஜன் என்பவர், நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் காலியாக உள்ள 1,663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 9ம் தேதி தமிழக அரசு தேர்வு நடத்த அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. அதில், மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு 3 சதவீதம் என்று அறிவித்துள்ளது.
மேலும், அதில், 40 சதவீதம் முதல் 70 சதவீதம் வரையுள்ள மாற்றுத்திறனாளிகள் மட்டுமே இட ஒதுக்கீட்டில் அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.
தமிழக அரசு அந்த சட்டத்தை மீறி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் 3 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதால் 18 பேருக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கும். அதுவே 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் 67 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
எனவே, தமிழக அரசு இந்த அறிவிப்பாணையை மத்திய அரசு இடஒதுக்கீட்டின்படி அறிவிக்க வேண்டும். அதேபோன்று, 40 முதல் 70 சதவீதம் மட்டும் மாற்றுத்திறனாளிகளாக உள்ளவர்களுக்கு மட்டும் இந்த இடஒதுக்கீடு என்ற கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு குறித்து தமிழக அரசு, ஆசிரியர் தேர்வு வாரியம், வரும் ஜூன் 2ம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment