அலுவலர் குழு நியமனம்
மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளைத் தொடர்ந்து,
தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு தமிழக அரசால் அலுவலர் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவின் முதல் கூட்டம் 16-ந் தேதியன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. நிதித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், அலுவலர் குழுவின் உறுப்பினர்களான, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் உதயச்சந்திரன், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் ஸ்வர்ணா ஆகியோரும் உறுப்பினர் செயலாளர் உமாநாத்தும் பங்கேற்றார்கள்.
கருத்து கேட்க முடிவு
இக்கூட்டத்தில் மத்திய அரசு செயல்படுத்தியுள்ள 7-வது ஊதியக் குழுவின் ஊதிய விகிதங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் குறித்த பரிந்துரைகள் குறித்தும், படிகள் பற்றிய பரிந்துரைகள் மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பது குறித்தும், இவற்றின் அடிப்படையில் தமிழக அரசின் தற்போதைய ஊதியம் மற்றும் ஓய்வூதிய விகிதங்களை திருத்தி அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டன.
தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி, 13.3.17 முதல் 15.5.17 தேதிவரை பல்வேறு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக, அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அமைப்புகளை நேரடியாக சந்தித்து கருத்துகளை கேட்டறிய முடிவு செய்யப்பட்டது.
தொடங்கியது
அதன்படி, மே 26 மற்றும் 27-ந் தேதிகளில் அரசின் அங்கீகாரம் பெற்ற அனைத்து அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அமைப்புகளையும், ஜூன் 2 மற்றும் 3-ந் தேதி அனைத்து அங்கீகாரம் பெறாத அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அமைப்புகளையும் அலுவலர் குழு நேரில் சந்திக்க அந்தக் குழு முடிவு செய்தது.
இதையடுத்து அந்தந்த சங்கங்களுக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டன. இந்த கருத்து கேட்பு கூட்டம், சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் நேற்று காலை 9 மணிக்குத் தொடங்கியது.
2 நாட்கள் நடக்கும்
இந்தக் கூட்டத்துக்கு நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமை தாங்கினார். அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தினர், அலுவலர் குழு முன்பு ஆஜராகி, கோரிக்கை மனுவை வழங்கினர். பின்னர் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
பின்னர் நிருபர்களுக்கு, க.சண்முகம் அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட 149 சங்கங்கள் உள்ளன. 100-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடன் 2 நாட்கள் கருத்து கேட்புகூட்டம் நடத்தப்படும். காலை மற்றும் மாலை வேளையில் இந்தக் கூட்டம் நடக்கும்.
அறிக்கை தாக்கல்
6-வது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைந்த பிறகு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும் என்று சங்கங்கள் கூறியுள்ளன. 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தும்போது ஊதிய விகிதத்தை மாற்றி அமைப்பது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் எங்களுக்குக் கிடையாது. அதை அரசுதான் முடிவு செய்யும். அனைத்து சங்கங்களுடன் பேசிவிட்டு ஜூன் மாத இறுதியில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment