'கவுன்சிலிங்' செல்லும் போது தெளிவான மனநிலை தேவை! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, May 29, 2017

'கவுன்சிலிங்' செல்லும் போது தெளிவான மனநிலை தேவை!

: ''கவுன்சிலிங்' செல்லும் போது, மாணவர்கள் தெளிவான மனநிலையுடன் செல்ல வேண்டும்,'' என பொள்ளாச்சியில் 'தினமலர்' நாளிதழ் சார்பில் நடந்த, 'உங்களால் முடியும்' நிகழ்ச்சியில், சென்னை அண்ணா பல்கலை., பேராசிரியர் ராஜேந்திரபூபதி தெரிவித்தார்.
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானதையடுத்து, மாணவர்கள்
இன்ஜினியரிங் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட உயர் படிப்புக்கு செல்ல கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்.
இதில், 'கட்-ஆப்' அடிப்படையில் கவுன்சிலிங்கில் எப்படி பங்கேற்பது, எந்த கல்லூரியை தேர்வு செய்வது என்பது போன்ற குழப்பங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் உள்ளது.குழப்பத்தை போக்கும் வகை யில், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி ஆண்டுதோறும் 'தினமலர்' நாளிதழ் சார்பில் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான நிகழ்ச்சி, பொள்ளாச்சி மீனாட்சி அம்மன் கல்யாண மண்டபத்தில் நேற்று நடந்தது. 
காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை நிகழ்ச்சி நடந்தது. 'தினமலர்' நாளிதழுடன், 'சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' இணைந்து வழங்கியது. ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி, ஸ்ரீ குரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, நேரு கல்விக்குழுமம் இணைந்து வழங்கியது.
சென்னை அண்ணா பல்கலை., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் ராஜேந்திர பூபதி பேசியதாவது: 'கவுன்சிலிங்' செல்லும் போது, மாணவர்கள் தெளிவான மனநிலையுடன் செல்ல வேண்டும். இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு வரும் 31ம் தேதி வரை ஆன்-லைனில் பதிவு செய்யலாம். விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, ஜூன் 3ம் தேதிக்குள் அனுப்பலாம் அல்லது நேரில் ஒப்படைக்கலாம்.
விண்ணப்பங்கள் பூர்த்தி செய்த பின், நகல் சான்றிதழ்கள் இணைக்கப்பட்டு ஒரு முறை சரிபார்த்து அனுப்ப வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பவர்கள், உரிய சான்றிதழுடன் நேரிடையாக விண்ணப்பிக்கலாம்.
கவுன்சிலிங் நாளில் ஒரிஜினல் சான்றிதழ்களை உடன் எடுத்து வர வேண்டும். கவுன்சிலிங் போது ரேண்டம் எண், ரேங்கிங் ஆகியவை முக்கியமானவை. கவுன்சிலிங் துவங்குவதற்கு ரேண்டம் எண் மற்றும் ரேங்கிங் வழங்கப்படும். 
ரேங்க் பட்டியல் தயாரிக்கும் போது, குறிப்பிட்ட இடத்திற்கு பலர் மோதும் நிலை ஏற்படும். அப்போது ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க ரேண்டம் எண் பயனுள்ளதாக இருக்கும். ரேங்கில் சிலருக்கு ஒரே 'கட்-ஆப்' மதிப்பெண் இருக்கும். 
இந்நிலையில், யார் கணிதத்தில் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறார்களோ அவர்களுக்கு ரேங்க் முன்னுரிமை கொடுக்கப்படும். அதற்கு அடுத்ததாக இயற்பியல் பாடம் மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமையும், வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயதும் ஒன்றாக இருந்தால் ரேண்டம் எண்ணில் யாருக்கு பெரிய எண் என்று பார்க்கப்படும். 
அதன் அடிப்படையில் ரேங்க் வழங்கப்படும். மேலும், மருத்துவ ரீதியாக உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.கவுன்சிலிங் தேதியன்று, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக வர வேண்டும்.
கவுன்சிலிங் வரும் போது, அழைப்புக் கடிதத்தை காட்ட வேண்டும். அதனை 'ஸ்கேன்' செய்தால், உங்களது முழுவிவரமும் வரும். அழைப்பு கடிதத்தை கொண்டு, எந்த பிரிவு வகையினர் என பார்த்த பின் அதற்கேற்ப கட்டணத்தை பணமாக கட்ட வேண்டும்.
பணம் கட்டிய பின், வழங்கப்படும் ரசீது பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அதில், வலது பக்கத்தில் உள்ள எண் எத்தனையாவது நபர் என தெரியும்.'கவுன்சிலிங்' வரும் போது, ஒரிஜினல் சான்றிதழ் உள்ளிட்டவையும் நேரிடையாக கொண்டு வர வேண்டும்.
தொழிற்கல்வி படிப்பு படித்தவர்களுக்கும், விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீட்டிற்கும் தனித்தனியாக கவுன்சிலிங் நடத்தப்படும்.மனப்பாடம் செய்து படிப்பதை நிறுத்திவிட்டு, இனி பாடங்களை புரிந்து படிக்க வேண்டும். மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். கல்லூரிகளுக்கு நேரிடையாக சென்று கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment