தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால் தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறையும்: வானிலை ஆய்வு மையம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, May 29, 2017

தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால் தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறையும்: வானிலை ஆய்வு மையம்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால் தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சென்னையில் இன்று
செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''தற்போது தெற்கு அரபிக்கடல் பகுதியில் ஈரப்பதம் மிகுந்த தென்மேற்கு திசை காற்று வலுப்பெற்று வருகிறது. இதன் காரணமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை செவ்வாய்க்கிழமை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. இதனால் கேரள கடலோரப் பகுதியில் மழை பெய்யத் தொடங்கும். தென்மேற்கு பருவமழையைப் பொறுத்தவரை, தமிழகம் மழை மறைவு பகுதியாக இருப்பதால், அவ்வளவாக மழை கிடைக்க வாய்ப்பில்லை.
மேலும், தற்போது வடகிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் 'மோரா' புயலானது, மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, செவ்வாய்க்கிழமை முற்பகல் வங்கதேச கடலோரப் பகுதியில் கரையை கடக்கக்கூடும். இதனால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே கோடை மழை பெய்துள்ளது. அறந்தாங்கியில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது. சென்னையின் பல பகுதிகளில் திங்கட்கிழமை மாலை திடீரென சாரல் மழை பெய்தது, பல இடங்களில் காற்று வேகமாக வீசி ஓய்ந்தது. சில இடங்களில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை தூறல் பெய்தது. சென்னையின் முக்கிய பகுதிகளான ராயப்பேட்டை திருவல்லிக்கேனி ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்தது. தென் சென்னையில் முக்கிய பகுதிகளான வட பழனி, வளசரவாக்கம், கிண்டி ஆகிய இடங்களில் பலத்த காற்று வீசியது.
அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை, உள் மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால், தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது'' என்று பாலச்சந்திரன் கூறினார்.

No comments:

Post a Comment