முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் 1981-ம் ஆண்டிலிருந்தே மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அவற்றில் பார்வை குறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை, கால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர்களுக்கு தலா 1 சதவீதம் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்பெற்று வருகின்றனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ன் படி, மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பணியிடங்களில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப் பட வேண்டும். அதனடிப்படையில், ஏற் கனவே நடைமுறைப்படுத்தி வந்த 3 சதவீதம் இடஒதுக் கீட்டினை, 4 சதவீதமாக தமிழக அரசு பணிகளிலும் உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.
அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு பணிகளில் செய்யப்படவிருக்கும் 4 விழுக்காடு ஒதுக்கீட்டில் (எ) பார்வை குறைபாடுடையோர்க்கு 1 சதவீதமும், (பி) செவித்திறன் குறைபாடுடையோர்க்கு 1 சதவீதமும், (சி) கை, கால் பாதிக்கப்பட்டோர் (மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், தொழு நோயால் பாதிக்கப்பட்டோர், குள்ளத்தன்மையுடையோர், அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் உட்பட) 1 சதவீதமும், (டி) புறஉலகு சிந்தனையற்றோர், அறிவுசார் குறை பாடுடையோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் மேலே (எ) முதல் (டி) வரையிலுள்ள பிரிவுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளில் பாதிக்கப்பட்டோர்களுக்கு (செவித்திறன் குறைபாடு மற்றும் பார்வைத்திறன் குறைபாடு ஆகிய இரண்டாலும் பாதிக்கப்பட்டோர் உட்பட) 1 சதவீதமும் என ஒதுக்கீடு வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். அதற்கான அரசாணைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த 4 சதவீத இட ஒதுக்கீடானது அனைத்து அரசுப் பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு உள்ளாட்சி அமைப்புகள், அரசின் நிதி உதவி பெறும் அமைப்புகள் ஆகியவற்றிற்குப் பொருந்தும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment