பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. தேர்வு எழுதிய பெரும்பாலான மாணவர்களுக்கு பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கும். தேர்வு முடிவு எப்படி
இருக்குமோ என்று சிலருக்கும் மதிப்பெண் எவ்வளவு வருமோ என்று வேறு சிலருக்கும் படபடப்பு ஏற்பட்டிருக்கும்.
இத்தகைய மனக் குழப்பங்களில் சிலர் தவறான முடிவுகளைத் தேடலாம். அதைத் தவிர்க்கவே மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்கத் தயார் நிலையில் இருக்கிறது 104 ஹெல்ப்லைன் சேவை.
மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் ஆலோசனைகளைப் பெறுவதற்கு '104' என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இது குறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் கூறியதாவது:
"கடந்த 2014-ம் ஆண்டு முதல் 104 சேவை மையத்தில் உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்த ஆலோசனை ஜனவரி மாதமே தொடங்கிவிடுகிறது. தேர்வு எழுதப்போகும் மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்துவது எப்படி, ஆரோக்கியமான உணவு முறை என்ன, எப்போது தூங்கவேண்டும், எவ்வளவு நேரம் தூங்க வேண்டும், மின்னணு சாதனங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வது எப்படி போன்ற பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
தேர்வு நடைபெறும் காலகட்டத்தில் இரண்டாம் கட்ட ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. சில மாணவர்கள் ஒரு தேர்வை ஒழுங்காக எழுதாவிட்டால் முடங்கிப் போய் அடுத்தடுத்த தேர்வுகளையும் சரியாக எதிர்கொள்ளாமல் போய்விடுவார்கள். அப்படியான மனக்குழப்பத்தில் தொடர்பு கொள்ளும் மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஆலோசனைகளை வழங்குகிறோம்.
மூன்றாம் கட்டம்தான் மிகவும் முக்கியமானது. தேர்வு முடிவு வெளியாகும் முந்தைய நாள். தேர்வு முடிவு வெளியாகும் நாள் மற்றும் தேர்வு முடிவு வெளியானதில் இருந்து மூன்று தினங்கள் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
இந்தக் காலகட்டத்தில் 7 உளவியல் ஆலோசகர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பர். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்குகின்றனர்.
மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்துவிடுபட எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நம் வெற்றியைத் தீர்மாணிப்பது தேர்வு முடிவுகள் மட்டுமல்ல" என்றார்.
என்ன மாதிரியான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன..
மன அழுத்தத்தில், வாழ்க்கையில் தோற்றுவிட்டோம் என்ற விரக்தியில் பேசும் மாணவர்களுக்கு ஆறுதல் கூறுவதோடு, சிற்சில மூச்சுப் பயிற்சிகளும் சொல்லித் தரப்படுகிறது. நம்பிக்கைக்குரியவர்களிடமோ நண்பர்களிடமோ மனம் விட்டு பேசுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
கடந்த ஆண்டு சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்தார் 104 சேவை மைய ஒருங்கிணைப்பாளர். "திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு மாணவி பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தார். ஆனால் அவருக்கு பொறியியல் கல்லூரியில் சேர முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அந்த மாணவியும் அவரது தாயாரும் மன அழுத்தத்தில் இருந்தனர். 104 சேவை மையத்தை தொடர்பு கொண்ட அவர்களுக்கு சுமார் 1 மணி நேரம் உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டது. அழுதுகொண்டே பேச ஆரம்பித்த அவர்கள் தன்னம்பிக்கையுடன் இணைப்பத் துண்டித்தனர்" என்று கூறினார்.
தேர்வு முடிவு காலங்களில் மாணவர்களைவிட பெற்றோர்களுக்கு அதிகமான ஆலோசனை தேவைப்படுவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். சக ஊழியர்களின் பிள்ளைகள் பெறும் மதிப்பெண்ணையும் தங்களது குழந்தைகளின் மதிப்பெண்ணையும் ஒப்பிட்டுப் பேசுவது தவறு என்பதைக் காட்டிலும் குற்றம் என்றே கூறலாம் என்கின்றனர் சில உளவியல் ஆலோசகர்கள்.
விவேகம் தேவை..
தேர்வு முடிவை கையாள விவேகம் தேவை. மாணவர்களுக்கு இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால் அண்மையில் வெளியான விவேகம் பட டீசரில் நடிகர் அஜித் பேசும் வசனத்தைக் கூட இந்தச் சூழலுக்குப் பொருத்திப் பார்க்கலாம். "நீயா ஒத்துக்குற வரைக்கும் உன்ன யாரும் ஜெயிக்க முடியாது. முயற்சியைக் கைவிடாதே" என்பது சினிமா வசனமாக இருந்தாலும் உத்வேகம் தரக்கூடியதாகவே இருக்கிறது.
No comments:
Post a Comment