NEET Exam | பிளஸ் 1 பாடங்களில் இருந்து நீட் தேர்வில் 51 சதவீத கேள்விகள் கல்வியாளர்கள் நடத்திய ஆய்வில் தகவல்.
நீட் தேர்வில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து 51.25 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள் நடத்தியஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 65 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள், 25 ஆயிரம் பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
இந்த மருத்துவப் படிப்புகளுக்கு 2017-18 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கடந்த 7-ம் தேதி நடந்தது. மத்திய இடைநிலைகல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய இத்தேர்வு நாடு முழுவதும் 103 நகரங்களில் 1,921 மையங்களில் நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 நகரங்களில் 80-க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடந்தது. கடந்த ஆண்டு ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்ட நீட் தேர்வு இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அசாம், வங்காளம் ஆகிய 10 மொழிகளில் நடைபெற்றது. வரும் ஜூன் 8-ம் தேதி இத்தேர்வின் முடிவு வெளியாக உள்ளது. 95 சதவீத மாணவர்கள் தமிழகத்தில் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 11 லட்சத்து 38 ஆயிரத்து 890 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 95 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். இத்தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்வி கள் கேட்கப்பட்டன.
ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப் பட்ட 4 விடைகளில் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து அடையாளப்படுத்த வேண்டும். தவறான பதில்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு எழுதிய மாணவர்கள் தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்டகேள்விகள் எளிதாக இருந்ததாகவும், இயற்பியல், வேதி யியல்பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தனர். பிளஸ் 1 பாடங்களில்அதிகம் நீட் தேர்வில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து அதிகமான கேள்விகள் கேட்கப் பட்டிருப்பது கல்வியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிளஸ்1 இயற்பியல் பாடத்தில் 49 சதவீதமும், பிளஸ் 2 இயற்பியல் பாடத்தில் 51 சதவீதமும், பிளஸ் 1 வேதியியல் பாடத்தில் 42 சதவீதமும், பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 58 சதவீதமும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
பிளஸ் 1 தாவரவியல் பாடத்தில் 47 சதவீதமும், பிளஸ் 2 தாவரவியல் பாடத்தில் 53 சதவீதமும், பிளஸ் 1 விலங்கியல் பாடத்தில்67 சதவீதமும், பிளஸ் 2 விலங்கியல் பாடத்தில் 33 சதவீதமும் கேள்விகள் இடம்பெற்றிருந்தன. ஒட்டுமொத்தமாக நீட் தேர்வில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து 51.25 சதவீதகேள்விகளும், பிளஸ் 2 பாடங்களில் இருந்து 48.75 சதவீத கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment