போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். பணிக்குத் திரும்பாத ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
ஒத்தக்கடையைச் சேர்ந்த செந்தில் குமரய்யா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், ''போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக 15-ம் தேதி அறிவித்துவிட்டு முன் கூட்டியே வேலைநிறுத்தத்தை தொடங்கிவிட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டது. தனியார் பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலித்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். எனவே, இந்த வேலைநிறுத்தத்தை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி முரளிதரன் சேஷசாயி அமர்வின் முன் வந்தது.
அரசுத் தரப்பில் பதிலளித்த வழக்கறிஞர், ''போக்குவரத்து வேலைநிறுத்தத்தால் 40% பாதிப்பு ஏற்பட்டுள்ளது'' என கூறினார்.
நீதிபதி முரளிதரன் சேஷசாயி அமர்வு, ''போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். அப்படி பணிக்குத் திரும்பாவிட்டால் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டது.
No comments:
Post a Comment