1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு வாட்ஸ் அப் அசைன்மெண்ட் - பள்ளி கல்வித்துறை உத்தரவு
1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அசைன்மெண்ட் கொடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் கல்வி பாதிக்காத வகையில் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், கற்றல் பணிகள் பாதிப்பின்றி நடக்க கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்துதல், கேபிள் டிவி மூலம் பாடங்களை ஒளிபரப்புதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை எடுத்து வருகிறது.
இதுதவிர ஆசிரியர்களும் பாடப்பொருள் சார்ந்த காணொலிகளை தயாரித்து வாட்ஸ் அப் மூலம் மாணவர்களுக்கு அனுப்பி வருகின்றனர். இருப்பினும் சில இடங்களில் கற்றல் கற்பித்தல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மாணவர்களின் கற்றல்
இதையடுத்து மாணவர்களின் கற்றல் அடைவை மதிப்பீடு செய்யும் வகையில் 1 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அனைத்து பாடங்களுக்கும் அலகு (யூனிட்) வாரியாக ஜுன்மாதத்துக்கான ஒப்படைப்பு தொகுப்பு (அசைன்மெண்ட்) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஜூலை மாதத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதையடுத்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களும் கீழ்க்கண்ட வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
மாத பாடங்கள்
ஒப்படைவுகள் (அசைன்மெண்ட்) மாதந்தோறும் அந்தந்த மாத பாடங்களுக்கான பாடப்பொருள் சார்ந்து தயாரிக்கப்பட்டு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கொண்ட வாட்ஸ் அப் குழுவை உருவாக்க வேண்டும்.
வாட்ஸ்அப் குழு
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டு அலகு வாரியான ஒப்படைவுகளை வாட்ஸ்அப் குழுவின் ஆய்வு அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு பகிர வேண்டும்.
ஆசிரியர்கள்
மாதந்தோறும் ஆசிரியர்கள் முலம் அனுப்பி வைக்கப்படும் ஒப்படைவு கேள்விகளுக்கான விடைகளை மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகத்தை பார்த்து எழுதி வாட்ஸ் அப் மூலம் வகுப்பாசிரியர்களுக்கு அனுப்ப வேண்டும்.
தெளிவான விளக்கம்
ஆசிரியர்கள் அந்த ஒப்படைவுகளை ஆய்வு செய்து எந்த பகுதியில் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் தேவைப்படுகிறதோ அந்தபகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்குரிய தெளிவான விளக்கத்தை காணொலியாக பதிவு செய்து வாட்ஸ்அப் மூலம் மாணவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பள்ளி கல்வித்துறை
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை முறையாக மதிப்பீடு செய்கிறார்களா என்பதை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment