தமிழக முதல்வா் திரு,மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை- பள்ளிகள் திறப்பு தேதி இன்று மாலை அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 21, 2021

தமிழக முதல்வா் திரு,மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை- பள்ளிகள் திறப்பு தேதி இன்று மாலை அறிவிப்பு

தமிழக முதல்வா் திரு,மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை- பள்ளிகள் திறப்பு தேதி இன்று மாலை அறிவிப்பு

    நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியது. தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்தது. அப்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்படதால் கொரோனா தொற்று கட்டுக்குள் வரத் தொடங்கியது. இதையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பத்தொடங்கியது. 

    கொரோனா கட்டுக்குள் இருந்த நிலையில் கடந்த கல்வி ஆண்டில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் பள்ளிக்கு சென்ற நிலையில் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவியது. இதையடுத்து மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை உச்சத்தை தொட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்தது. உயிர் பலியும் அதிகரித்தது. இதையடுத்து கடந்த மே மாதம் 10-ந்தேதி முதல் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

    காய்கறி மற்றும் மளிகை கடைகளுக்கு இந்த ஊரடங்கின் போது தளர்வு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து மே மாதம் 24-ந்தேதி முதல் ஜூன் மாதம் 7-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மருந்து கடைகள், பால் உள்ளிட்ட மிக அத்தியாவசிய சேவைகள் மட்டும் இயங்கின. அதன்பிறகு கொரோனா தொற்றின் 2-வது அலை கட்டுக்குள் வரத்தொடங்கியது. இதனால் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்புநிலை ஓரளவு திரும்பியுள்ளது. ஆனாலும் பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. 

        தியேட்டர்கள், சுற்றுலா தலங்கள் திறக்கப்படவில்லை. கோவில்கள் திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே திறக்கப்பட்டு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை. புதுச்சேரி தவிர வெளி மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படவில்லை. தமிழகத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு தற்போது 1,700-க்கு கீழ் குறைந்துள்ளது. நேற்று 1,668 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர். 

        இந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. இதையடுத்து ஊரடங்கை இன்னும் எத்தனை நாட்களுக்கு நீட்டிப்பு செய்வது? திங்கட்கிழமை முதல் என்னென்ன கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது என்பது தொடர்பாக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வருவாய் பேரிடர் துறை செயலாளர் குமார் ஜெயந்த், செந்தில்குமார், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

         தற்போது கொரோனா தொற்றின் 3-வது அலை பரவும் என்று நிபுணர்கள் கணித்துள்ள நிலையில் இந்த கூட்டம் நடக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா கட்டுக்குள் இருக்கிறது. ஆனால் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் என்ன என்பது பற்றியும், இதை கட்டுப்படுத்துவது பற்றியும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. கொங்கு மண்டலமான கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தற்போது தொற்று ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதை மேலும் பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது. 

         வருகிற திங்கட்கிழமை முதல் மீண்டும் ஊரடங்கை எத்தனை நாட்கள் நீட்டிப்பது என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை வருகிற 1-ந்தேதி திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அப்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பள்ளிகளை திறந்தால் என்னென்ன முன்ஏற்பாடுகளை செய்ய வேண்டும். 1-ந் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்தும் அதிகாரிகளுடன் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். பள்ளிகளை திறக்கும் போது மாணவர்களுக்கு தொற்று பரவாமல் இருக்க என்னென்ன முன்ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது பற்றி பள்ளிக்கூடங்களுக்கு ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இதை நடைமுறைபடுத்துவதற்கு என்னென்ன ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

        பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட இருப்பதால் தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் வலியுறுத்தி வந்தனர். எனவே 50 சதவீத ரசிகர்களுடன் தியேட்டர்களை திறக்கலாமா? தியேட்டர்களை திறப்பதால் பாதிப்பு அதிகரிக்குமா என்பது பற்றியும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் தற்போது வழிபாட்டு தலங்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மூடப்பட்டுள்ளன. அதை திறக்கலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டது. சுற்றுலா தலங்களில் பயணிகளை அனுமதிக்கலாமா என்பது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 

         இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை அறிவிப்பாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வருகிற 1-ந்தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுமா என்பது இன்று மாலை தெரிய வரும். மேலும் ஊரடங்கு தளர்வில் தியேட்டர்கள், சுற்றுலா தலங்கள் திறக்கப்படுமா என்பது பற்றியும் அறிவிப்பில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More news on



No comments:

Post a Comment