தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும், பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்தது. இதனால் அப்போது முதலில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது
தளர்வுகளுக்குப் பிறகு மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்து வருகிறது. 35 ஆயிரம் என்று இருந்த வைரஸ் பாதிப்பு இப்போது 2000க்கும் கீழாகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 23ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைவதாக இருந்தது. அதிலும்கூட கடந்த சில வாரங்களுக்கு முன் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதால் சுதாரித்துக் கொண்ட மாநில அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தது. இந்தச் சூழ்நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு, அதாவது வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முன் அறிவிக்கப்பட்ட ஊரடங்குகளைப் போல இல்லாமல், இதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகப் பலரும் எதிர்பார்த்தபடி, 50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பள்ளிகள் திறப்பு குறித்தும் முக்கிய அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறக்க முடிவெடுத்துள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்த நிலையில், அது குறித்த அறிவிப்புகளும் இதில் வெளியாகியுள்ளது
தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், "வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்படும்.
இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படும். மேற்படி உயர் வகுப்புகள் செயல்படுவதைக் கவனித்து அதன் அடிப்படையில், மழலையர் வகுப்புகள். 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளைச் செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.
அனைத்து கல்லூரிகளும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளைத் தொடர்புடைய துறையின் செயலாளர்கள் வழங்குவார்கள். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகள் (Diploma Courses, Polytechnic Colleges) சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
அங்கன்வாடி மையங்கள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மதிய உணவு வழங்குவதற்காகச் செயல்பட அனுமதிக்கப்படும் அங்கன்வாடி மைய ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பது மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment