அனைத்துக் கல்லூரிகளும் செப்.1 முதல் திறப்பு; ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
செப்.1 முதல் அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்படும் என்றும், அங்கு பணியாற்றும் ஆசிரியர்களும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 23.08.2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தில் மாவட்ட வாரியாக நோய்த்தொற்றுப் பரவலின் தன்மை, அண்டை மாநிலங்களில் நோய்த்தொற்றின் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்து இன்று (21.08.2021) தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
முழுமையாகப் படிக்க: பள்ளிகளில் காய்ச்சல், சளி, இருமலுடன் வரும் மாணவர்களைத் தனிமைப்படுத்தத் தனி அறை: ஆணையர் உத்தரவு
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டு, சுழற்சி முறையில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துத் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், ''அனைத்துக் கல்லூரிகளும் செப்டம்பர் 1 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையின் செயலாளர்கள் வழங்குவார்கள்.
கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
அனைத்துப் பட்டயப் படிப்பு வகுப்புகள் (Diploma Courses, Polytechnic Colleges) சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். அதில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செப்.1 முதல் 9 - 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்
No comments:
Post a Comment