தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் டோல்கேட் கட்டணம் உயரவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள டோல்கேட்களில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக வாகன உரிமையாளர்கள் மிக நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன் டோல்கேட்களை அகற்ற வேண்டும் என்பதும் வாகன ஓட்டிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. ஆனால் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படுவதற்கு எந்த அறிகுறிகளும் தென்படவில்லை.
எனவே குறைந்தபட்சம் டோல்கேட் கட்டணத்தையாவது குறைக்க வேண்டும் என வாகன உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் இந்த கோரிக்கைக்கு நேர்மாறாக குறிப்பிட்ட கால இடைவெளிகளில் டோல்கேட் கட்டணம் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தமிழ்நாட்டில் வெகு விரைவில் டோல்கேட்களில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 14 டோல்கேட்களில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 8 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிகிறது. அத்துடன் வரும் செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து இந்த கட்டண உயர்வு அமலுக்கு கொண்டு வரப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன நாங்கள் ஏற்கனவே கூறியபடி 14 டோல்கேட்களில் கட்டணம் உயரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை சாலையில் செயல்பட்டு வரும் விக்கிரவாண்டி டோல்கேட், உளுந்தூர்பேட்டை-பாடலூர் சாலையில் இயங்கி வரும் திருமாந்துறை டோல்கேட் ஆகியவற்றில் கட்டணம் உயரவுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர சென்னை-தடா சாலையில் இயங்கி கொண்டுள்ள நல்லூர் டோல்கேட், சேலம்-குமாரபாளையம் சாலையில் இருக்கும் வைகுந்தம் டோல்கேட் ஆகியவற்றிலும் கட்டணம் உயரவுள்ளதாக தெரிகிறது. அத்துடன் சேலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் செயல்பட்டு வரும் மேட்டுப்பட்டி டோல்கேட்டிலும் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என கூறப்படுகிறது
மேலும் திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள பொன்னம்பலப்பட்டி டோல்கேட் மற்றும் தஞ்சாவூர்-திருச்சி சாலையில் இருக்கும் வாழவந்தான்கோட்டை டோல்கேட் என ஒட்டுமொத்தமாக 14 டோல்கேட்களில் கட்டணம் உயரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளில் உள்ள வாகன உரிமையாளர்களுக்கு இந்த தகவல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன உரிமையாளர்கள் ஏற்கனவே மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் தற்போது ஒரு லிட்டர் எரிபொருளின் விலை 100 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகி கொண்டுள்ளது. எனவே வரிகளை குறைக்க வேண்டும் என ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு வாகன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சமீபத்தில் பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது. இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கும் கொண்டு வரப்பட்டு விட்டது. தமிழ்நாட்டை சேர்ந்த வாகன உரிமையாளர்களுக்கு இந்த விலை குறைப்பு சற்றே நிவாரணத்தை வழங்கியுள்ளது.
இதேபோல் ஒன்றிய அரசும் விலையை குறைக்க வேண்டும் என வாகன உரிமையாளர்கள் தற்போது வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையாவது நிறைவேற்றப்படுமா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்களின் கவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி திரும்பி வருகிறது.
அதற்கேற்ப தற்போது இந்திய சந்தையில் பல்வேறு எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்ச்சியாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதில், Ola Electric S1, S1 Pro மற்றும் Simple One உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பொதுமக்களின் கவனத்தை அதிகம் கவர்ந்துள்ளன.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்றுதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.
பெட்ரோல் விலை உயர்வு காரணமாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அமோக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment